தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஆறுகளில் சுதந்திரமாக மணல் அள்ளலாம். மீறி அதனை தடுக்கும் அதிகாரிகளை இல்லாமல் செய்வேன் என்ற அறிவிப்பை வெளிப்படையாக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போதே வெளியிட்டார் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. கடந்த ஆட்சி காலத்தில், மணல் மஃபியா, கருப்புப் பணம் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சேகர் ரெட்டி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
சமீபத்தில், வடமண்டல மணல் மாஃபியா என்று அழைக்கப்படும் கரிகாலனுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் அவரது மகனும் நெருங்கி இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் சேகர் ரெட்டி, ராமச்சந்திரன், திண்டுக்கல் ரெத்தினம், ஆகியோரின் துணையுடன் செயல்பட்டு வருபவர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சட்டவிரோத மணல் கடத்தலுக்கு அனுமதியளிப்பதற்காக ரூ. 300 கோடி பணம் கைமாறியது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த பணத்தை அமைச்சரின் உதவியாளர் பெற்றுக் கொண்டு, இதில் இடைத்தரகராக செயல்பட்டவருக்கு கமிஷன் தராததால், அந்த இடைத்தரகர் அமைச்சரின் உதவியாளருக்கு போனை போட்டு பேசிய உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி திமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில் இல்லாத நிலையில், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், தனது ஆட்சியின் மீது யாரும் குறை சொல்லக்கூடாது என கவனமாக செயல்படுகிறார். ஆனால், அமைச்சர்களோ, இதுபோன்று சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது முதல்வருக்கும் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாக இருக்கிறது. எனவே, இவ்விவகாரத்தில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.