மும்பை கோட்ட ஐ.ஓ.பி., வங்கி கிளையில், ஹமிதா ஏ லால்ஜி என்பவர் 40 கோடி ரூபாயை டெபாசிட் செய்து வைத்திருந்தார். அவர் இறந்து விட்டதால் அந்தச் சேமிப்பு வங்கிக்கணக்கு செயல்படாமல் இருந்தது. இதையறிந்த தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த உமா காந்தன் என்பவர் இந்த பணத்தை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக கையாடல் செய்ய திட்டமிட்டார். இதற்காக, இலங்கை தமிழரான லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்பவரை பாரதம் அனுப்பினார். இங்கு வந்த அவர் போலி ஆவணங்கள் மூலம் பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போன்றவற்றை பெற்றார். அவருடன், கென்னிஸ்டன் பெர்னாண்டோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் உள்ளிட்டோர் இணைந்து, இறந்த லால்ஜியிடம் இருந்து பொது ஆவண அதிகாரம் பெற்றதாக போலி ஆவணங்கள் தயாரித்து பணத்தை எடுக்க முயன்றனர். ஆனால், இந்த ஆறு மோசடி பேர்வழிகளூம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்து ஜாமீன் வழங்கக்கோரி அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.