பி.எஸ்.டி. கட்டுமான ஒப்பந்தம்; அரசு முடிவுக்கு அண்ணாமலை எதிர்ப்பு

கடந்த, 2009ல் தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்ட நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான ஒப்பந்தம், தற்போது, பி.எஸ்.டி., என்ற கட்டுமான நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதுவரை, 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, தி.மு.க., அரசு தேர்வு செய்துள்ள பி.எஸ்.டி., நிறுவனம், தரம் குறைவான கட்டடங்களை கட்டியதாக, இதே ஆட்சியால் குற்றம் சாட்டப்பட்டது தான் விந்தை. தரக்குறைவான கட்டடங்களை கட்டியதாக, பி.எஸ்.டி., நிறுவனத்தின் மீது புகார் வந்தது. இதையடுத்து, ‘திமு.க., அரசு அமைத்த ஐ.ஐ.டி., ஆய்வு குழு அறிக்கையில், அந்நிறுவனம் கட்டிய ஏழைகளுக்கான குடியிருப்புகளில் செய்யப்பட்ட பூச்சு வேலை, 90 சதவீதம் தரமற்றது; முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார்’ என்று சட்டசபையில், அமைச்சர் அன்பரசன் கூறினார். ‘இனிமேல் அரசு பணிகள், பி.எஸ்.டி., நிறுவனத்திற்கு வழங்கப்படாது’ என, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். தற்போது, சென்னை நந்தம்பாக்கத்தில், 250 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள நிதிநுட்ப நகரத்திற்கான கட்டுமான பணிக்கு, இதே, பி.எஸ்.டி., நிறுவனத்துடன் ஒப்பந்தும் செய்துள்ளது அரசு. இனிமேல் அரசு பணிகளில் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்ட நிறுவனத்திற்கு, மீண்டும் அரசு பணி ஒப்பந்தம் வழங்கி, அழகு பார்க்கிறது, தி.மு.க., அரசு. மக்கள் வரிப் பணத்தை, அவர்களின் நல திட்டங்களுக்கு செலவிடாமல் இடையில் யாரோ சம்பாதிக்க, ஏற்கனவே தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதா? உடனே, பி.எஸ்.டி., நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.