அயோத்யா மண்டபம் போராட்டம்

தமிழக அரசு, ஒருபுறம் நீர் நிலைகளை ஆக்கிரமித்துக்கட்டி இருப்பதாக கூறி, பல கோயில்களை இடித்துத் தள்ளி வருகிறது. அதில் சில கோயில்கள் 50 முதல் 100 வருட பழமையானவை. மறுபுறம் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த தங்க நகைகளை உருக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாம்பலத்தில் உள்ள பழம்பெருமை மிக்க, ஸ்ரீராம் சமாஜம் எனப்படும் ஒரு தனியார் அமைப்புக்கு சொந்தமான அயோத்யா மண்டபத்தை ஹிந்து அறநிலையத்துறை கைப்பற்ற முயற்சி எடுத்துள்ளது. இந்த மண்டபத்தை நிர்வகித்து வந்த ராம சமாஜம் அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி அயோத்யா மண்டபத்தை கடந்த 2014ல் ஹிந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. இதனை எதிர்த்து, ராம சமாஜம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ராம சமாஜத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், நேற்று அயோத்தியா மண்டபத்தை கைப்பற்ற ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர். உரிய சட்ட விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் ஹிந்து அறநிலையத்துறை அயோத்யா மண்டபத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, ஹிந்து அமைப்புகள், பா.ஜ.கவினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். காவல்துறை அதிகாரிகள் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.