கைகளால் மலம் அள்ளுவதை ஒழிக்க வேண்டும்

மனித கழிவுகளை அகற்றுபவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.கைகளால் மனிதக்கழிவுகளை அகற்றுவோர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்களாக அறிவித்து சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “கைகளால் மலம் அள்ளும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.கைகளால் மலம் அள்ளும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.மலக்குழி மற்றும் கழிவுநீர் தொட்டிகளை இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.கைகளால் மலம் அள்ள தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம் 2013’ஐ அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும்.இந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.இப்பணியால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இத்தொழிலில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும்.இழப்பீடு வழங்காமல் இருந்தால் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர்.