உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா நகரை சேர்ந்த துறவிகள் நான்கு பேர் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு சென்றனர். அவர்கள், மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்தபோது, வழி தெரியாத காரணத்தால், அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவனிடம் சென்று உதவி கேட்டுள்ளனர். ஆனால், அங்குள்ள மக்கள் துறவிகளை பிள்ளை பிடிக்க வந்தவர்கள் என எண்ணி ஒன்றாக திரண்டு கம்புகளால் அடித்து, உதைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளிவந்ததையடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், ‘இது குறித்து அவர்களிடம் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. எனினும், சம்பவத்தின் பின்னணி, உண்மை தன்மையை ஆய்வு செய்து வருகிறோம்’ என சங்கிலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீட்சித் கெடான் கூறியுள்ளார். இதே மகாராஷ்டிராவில் பால்கர் பகுதியில் கடந்த 2020ல் இரண்டு சாதுக்கள் உட்பட மூன்று பேரை இடதுசாரி ஆதரவாளர்கள் கொடூரமாக அடித்து கொலை செய்தனர் என்பது நினைவு கூரத்தக்கது. எனவே இந்த சம்பவத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.