பத்திரிகையாளர் மீது தாக்குதல்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ‘ஆட்சி மாற்றம்’ குறித்த தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அயாஸ் அமீர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “ராணுவ ஜெனரல்கள் சொத்து வியாபாரிகளாக மாறிவிட்டனர். முஹம்மது அலி ஜின்னா மற்றும் அல்லாமா இக்பால் ஆகியோரின் உருவப்படங்களை அகற்றிவிட்டு அங்கு சொத்து வியாபாரிகளின் படங்களை மாட்டுங்கள்” என கூறினார். இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில், இரவு லாகூரில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி முடித்துவிட்டு அவர் திரும்பிக்கொண்டிருக்கையில், முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை காரில் இருந்து வெளியே இழுத்து கடுமையாக தாக்கினர். அவரது பணப்பையையும் பறித்துச் சென்றனர். மக்கள் திரளத் தொடங்கியதும் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அவரது புகாரைத் தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் கண்டித்துள்ளார். ஆனால், அவரது ஆட்சி காலத்திலேயே அவரையும் ராணுவத்தையும் குறைகூறிய பல பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பது வரலாறு.