நம் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்ககோரி, ஒரு பிரிவினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் உள்ள பாரத துாதரகங்கள் மற்றும் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பாரத துாதரகத்தை முற்றுகையிட்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, கட்டடத்தில் பறந்து கொண்டிருந்த பாரத மூவர்ண கொடியை அவர்கள் பிடுங்கி கீழே தள்ளினர். காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.
இந்த சம்பவம் உலக அரங்கில் கடும் அதிர்வை ஏற்படுத்தியது. ‘பாரத துாதரகத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை’ என, பிரிட்டன் அரசிடம், மத்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்தது. பிரிட்டனில் துவங்கிய இந்த செயல், பல்வேறு நாடுகளுக்கும் மெல்ல பரவியது. கடந்த மார்ச்சில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பாரத துணை துாதரகத்தின் முன், காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் துாதரக அதிகாரிகளை தாக்க முயன்றனர். போலீசார் தலையிட்டதை தொடர்ந்து அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே, வட அமெரிக்க நாடான கனடாவில், ‘காலிஸ்தான் டைகர் போர்ஸ்’ என்ற அமைப்பை துவக்கி, பாரதத்திற்கு எதிராக சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர், சமீபத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதில் ஆத்திரமடைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பாரத துணை துாதரகத்துக்கு தீ வைத்தனர். இதற்கெல்லாம் உச்சகட்டமாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டனில் உள்ள பாரத துாதரகத்தின் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்போவதாக, காலிஸ்தான் பயங்கரவாதிகள், சமூகவலைதளங்களில் பல்வேறு சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். இதில், பிரிட்டனுக்கான பாரத துாதர் விக்ரம் துரைசாமி, பிர்மிங்காமில் உள்ள பாரத துணை துாதரக அதிகாரி டாக்டர் சஷாங்க் விக்ரம் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மிரட்டலுக்கு, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி கூறியதாவது: லண்டனில் உள்ள பாரத துாதரகத்தின் மீதோ, அதன் அதிகாரிகள், ஊழியர்கள் மீதோ நேரடி தாக்குதல் நடத்தப்பட்டால், பிரிட்டன் அரசு பொறுத்துக் கொள்ளாது. பாரத துாதரக ஊழியர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது. இது குறித்து பாரதத்திற்கான துாதர் விக்ரம் துரைசாமி மற்றும் பாரத அரசிடம் தெளிவுபடுத்தி உள்ளோம். பாரத துாதரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை, பிரிட்டன் அரசு மறு ஆய்வுக்கு உட்படுத்த உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.