நாட்டின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம், கடந்த 19 மாதங்களில் இல்லாத வகையில் 8.39ஆக குறைந்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் பணவீக்கம் 10.79 சதவீதமாக இருந்த நிலையில் அக்டோபரில் பணவீக்கம் 8.39ஆக குறைந்துள்ளது. 2021 மார்ச் முதல் 10க்கும் மேலாகவே பணவீக்கம் இருந்த நிலையில் மீண்டும் ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது. இதனை வளர்ச்சிக்கான அறிகுறியாகவே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, எரிபொருள் விலை சரிவு ஆகியவற்றினால் விலைவாசி குறைய தொடங்கியுள்ளது. இதனுடைய எதிரொலியாக மொத்த விலை பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. இது உற்பத்தி மற்றும் இன்னும் பிற துறைகளை வேகமடைய செய்வதோடு மட்டும் அல்லாமல் புதிய நம்பிக்கையையும் உருவாக்கும். மொத்த விலை பணவீக்க விகிதம் கணக்கீடுவதில் மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தி துறையின் பங்களிப்பு உள்ளது. அவ்வகையில், உற்பத்தி துறையில் மூலப்பொருட்களின் விலை 4 சதவிகிதம் அளவுக்கு சரிந்துள்ளது. எரிபொருள் விலை, மின்சாரத்தின் விலை 23 சதவிகிதம் குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை சரிய தொடங்கியுள்ளதோடு மட்டும் இல்லாமல் முக்கிய கமாடிட்டி பொருட்களின் விலையும் குறைய தொடங்கியுள்ளது. இதனால் சில்லறை பணவீக்க விகிதமும் குறையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. பொருளாதாரத்தை கட்டமைப்பதில் பணவீக்க விகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பணவீக்க விகிதம் அதிகரிக்கும் போது, கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும், உணவு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும். இதனால் பொருளாதாரத்தில் தேக்க நிலை உருவாகும் வாய்ப்பு ஏற்படும். மொத்த விலை பணவீக்க விகிதம் சரிவடைந்துள்ளதால், சில்லறை பணவீக்க விகிதமும் சரிய வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களாக பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.