சிறுகோள் தினம்

சிறுகோள் என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களினும் மிகச் சிறியவை. வால் நட்சத்திரம் பண்பேதும் இல்லாத, சூரியக் குடும்ப உருவாக்கத்தின்போது கோள்களுக்குள் சேர்த்துக் கொள்ளப்படாத, எச்சங்களாகிய வான்பொருள்கள். சிறுகோள்களில் பெரியதும், கோளைவிட சிறியனவாக அமையும் வான்பொருள்கள் ‘கோள்போலிகள்’ எனப்படுகின்றன.

மிகப் பெரும்பான்மையான சிறுகோள்கள், சிறுகோள் பட்டைப் பகுதியிலேயே காணப்படுகின்றன. சிறுகோள் பட்டைகள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் உள்ளன. சில சிறுகோள்களுக்கு, நிலாக்களும் அமைவதுண்டு. சூரியக் குடும்பத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மேற்பரப்புகள் வால் நட்சத்திரங்களைப் போல ஆவியாகும் தன்மையோடு ஒத்திருக்கின்றன. எனவே, இவை சிறுகோள்பட்டையில் உள்ள சிறுகோள்களில் இருந்து பிரித்து உணரப்படுகின்றன.

வியாழனின் அரைப் பேரச்சுகளுக்கு அப்பாலுள்ள, பனிக்கட்டியினாலான சிறியகோள்கள், வால் நட்சத்திரங்கள், செண்டார்கள், நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பொருள்கள், விண் கற்கள், கோளிடை வெளியிலுள்ள திண்மப் பொருட்கள் ஆகியவை சிறுகோள்களை விடவும் சிறியவை. விண்கற்கள் பொதுவாக பாறை அளவு அல்லது அதனினும் சிறியவை.

1801 ஆம் ஆண்டிற்குப் பிறகு, வானில் பல நுண்ணிய பொருள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் நடுவிலுள்ள நீள் வட்டப்பாதைளில், சூரியனைச் சுற்றி வருவதாகக் கண்டுபிடிக்கபட்டது. அவை சூரியனைச் சுற்றுவதால் அவற்றைக் கோளாகத்தான் மதிக்க வேண்டும். ஆனால் அவை மிகமிகச் சிறியவை. அவை விண்மீன்களைப் போலவே புள்ளி புள்ளியாகத் தெரிகின்றன. அதனால் அவற்றுக்கு  ‘அஸ்டிராய்டு’ என பெயர் இடப்பட்டது. ஆனால் சில அறிவியலாளர்கள் கோள்களை ஒத்து இருப்பதால், ‘பிளானடாய்டு’ என்ற பெயரைப் பயன்படுத்தினர்.

இவை சில வேளைகளில், புவியின் வளிமண்டலத்தில் புகுந்து விடுவதுண்டு. அவை காற்றுடன் உராய்ந்து சூடாகி எரிந்து விடும். அவற்றை ‘விண்கொள்ளிகள்’ என்கிறார்கள். சில விண்கொள்ளிகள் முழுவதுமாக எரிந்து விடாமல் அவற்றின் ஒரு பகுதி தரையில் வந்து விழுவதுண்டு. அவற்றை விண்தாது என்பர். அது புவியின் வளிமண்டலத்தில் நுழையாமல் விண்வெளியிலேயே இருந்தால் அதை விண்கல் எனக் குறிப்பிடுகிறார்கள்.

ப. மகிரிஷன்