கடந்த 2019 ம் ஆண்டு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட பிஷப்க்கு சொந்தமான எம் சாண்ட் நிறுவனம் மூலமாக, சுத்தமான மணல் எடுக்கப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த அப்போதைய துணை ஆட்சியர், 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவிலான ஆற்று மணல் கேரளாவிற்கு கடத்திய குற்றச்சாட்டின் பேரில் பிஷப்பின் நிறுவனத்துக்கு 9.56 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் மற்றும் 5 பாதிரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அப்போதைய கனிமவளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சபியா என்பவர் இந்த மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது ஊட்டியில் பணியாற்றி வந்த சபியாவை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.