அக்னி வீரர்களுக்கு உதவி

மத்திய அரசு சமீபத்தில் ’அக்னிபத்’ என்ற திட்டத்தை அறிவித்தது. அக்னிபத் திட்டம் இளைஞர்கள் தேசப்பற்றுடன் ஆயுதபடைகளில் இணைந்து 4 ஆண்டுகள் இணைந்து சேவையாற்ற வழிவகை செய்கிறது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அக்னி வீரர்கள் தங்களது பணிக்காலத்தை நிறைவு செய்த பிறகு அவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் நன்மை தரும் திட்டங்கள் குறித்து பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் தலைமைச் செயல் அதிகாரிகள் உடன் நிதிச் சேவைகள் துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் ராணுவ விவகாரங்கள் துறை இணை செயலர் அக்னிபத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். அக்னி வீரர்களின் கல்வி மற்றும் திறனுக்கு ஏற்ப அவர்களுக்கு சலுகைகள், தளர்வுகள் ஆகியவற்றின் மூலம் பொருத்தமான வேலை வாய்ப்புகளை வழங்க பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆராய வேண்டுமென இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், அக்னி வீரர்களுக்கு திறனை மேம்படுத்த கடன் வசதிகள், வணிகம் மேற்கொள்வதற்கும், சுய தொழில் அமைப்பதற்குமான கல்வி ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு உதவுவதற்கான சாத்தியக் கூறுகளை வங்கிகள் ஆராய வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய அரசு திட்டங்கள் மூலமும் அக்னி வீரர்களுக்கு ஆதரவு அளிக்கப்படவுள்ளது.