பி.ஜே.ஒய்.எம் தலைவர் படுகொலை

கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கோட்டூர் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவரும், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பி.ஜே.ஒய்.எம்) தார்வாட் பகுதியின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்த பிரவீன் கம்மர், கடந்த புதன்கிழமை மதியம் 1 மணியளவில் கிராமத்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, தார்வாட்டில் உடச்சம்மா தேவி கோயில்; திருவிழா கொண்டாட்டத்தின் போது இந்த கொலை நடந்துள்ளது. கோயில் யாத்திரை நடந்துகொண்டிருந்தபோது, பிரசாதம்’ விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, போதையில் இருந்த சிலர் அங்கு பிரச்சனை செய்ததை அவர் தட்டிக்கேட்டதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போதை ஆசாமிகள் முதலில் அங்கிருந்து வெளியேறினர். ஆனால் மீண்டும் திரும்பி வந்து பிரவீன் கம்மர் மற்றும் அவரது ஆதரவாளர்களை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பைத் தடுக்க பிரவீன் கம்மர் தலையிட முயன்றபோது, அவரது முகத்தில் கடுமையாகத் தாக்கி, கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்திக் கொன்றனர். அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பிரவீன் கம்மாரை கத்தியால் குத்தியவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கர்நாடக சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அலோக் குமார் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினரும் பி.ஜே.ஒய்.எம் தலைவருமான தேஜஸ்வி சூர்யாவும் இந்த சம்பவம் குறித்து தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், பி.ஒய்.ஜே.எம் தலைவர் பிரவீன் கம்மர் கொல்லப்பட்டது அரசியல் போட்டியால் தூண்டப்பட்டது என்று கூறினார். இந்த விவகாரத்தில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.