அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள சங்கர்தேவ் கலாக்ஷேத்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா, ‘பா.ஜ.கவின் முதல் ஆட்சிக் காலத்தில் அசாம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுகிறது. அது இனியும் தொடரும். அசாம் மற்றும் மணிப்பூரில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு அங்கு முன்புபோல அடிக்கடி கடையடைப்புகள், போராட்டங்கள், வன்முறைகள் நடைபெறுவது இல்லை. வரலாற்று சிறப்புமிக்க போடோ ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை சரியான திசையில் பயணிக்கிறது. வரும் 2024க்குள் வடகிழக்கில் கிளர்ச்சிகள் முடிவுக்கு வரும். மக்களின் தனித்துவமான கலாச்சாரங்கள், மொழிகள், அடையாளம், உணவுப் பழக்கங்களைப் பாதுகாக்க பா.ஜ.க எப்போதும் விரும்புகிறது. பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறார். கடந்த ஆறரை ஆண்டுகளில் 35 முறை வடகிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளார். வடகிழக்குப்பகுதி ஐந்து மத்திய அமைச்சர்களை பெற்றுள்ளது’ என தெரிவித்தார். முன்னதாக, 430 படுக்கைகள் கொண்ட தமுல்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய உள்துறை அமைச்சர், மாநில அரசின் பார்த்தானா திட்டத்தின் கீழ் கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். பின்னர் புகழ்பெற்ற காமாக்கியா கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.