தி கேரளா ஸ்டோரியை வரவேற்ற அசோகன்

மே 5ம் தேதி வெளியான கேரளா ஸ்டோரி திரைப்படம், ஹாதியா வழக்கு என்று பிரபலமாக அறியப்படும் ஷஃபின் ஜஹான் மற்றும் அசோகன் இருவருக்கும் இடையேயான வழக்கை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. அசோகன் என்பவரின் மகள் ஹதியா, முன்பு அகிலா என்று அழைக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவ மாணவி. இவர் மூளைசலவை செய்யப்பட்டு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஷஃபின் ஜஹான் என்ற முஸ்லிம் நபரை மணந்தார்.அவர் தற்போது மலப்புரம் மாவட்டம், கோட்டக்கல்லில் ஹோமியோபதி மருத்துவராகப் பணிபுரிகிறார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கும் ஷஃபின் ஜஹானை திருமணம் செய்து கொள்வதற்குமான தனது உரிமையை மீட்டெடுத்தார் ஹதியா என்ற அகிலா. ஆனால், இத்திருமணம் வெறும் 5 ஆண்டுகள் தான் நீடித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு. ஹதியா தனது கணவரை விவாகரத்து செய்ய விவாகரத்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். எனினும், அவர் இன்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் ஆர்வலர் ஏ.எஸ். ஜைனபா என்பவரின் பாதுகாப்பில் தான் உள்ளார் என கூறப்படுகிறது.

அசோகன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்து நிறுவனத்திடம் பேசுகையில், “உச்சநீதிமன்றம் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த உடனேயே என் மகள் எங்களைவிட்டு வெளியேறினார். 2018ம் ஆண்டிலிருந்து நான் அவரைச் சந்தித்ததில்லை. நான் அவரைச் சந்திக்கும் போதெல்லாம், ஜைனபாவும் அவரது சமூகமக்களும் என் மகளைச் சூழ்ந்துகொண்டு அவருடன் நான் தனிப்பட்ட முறையில் பேச அனுமதிக்கவேயில்லை.இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு ஹதியா ஒருமுறை என்னிடம் சிரியா சென்று ஆடுகளை மேய்க்க விரும்புவதாக கூறினார். பி.எப்.ஐ தலைவர்களின் வீடுகளில் நடந்த சோதனைக்குப் பிறகுதான் மகளை கடைசியாக சந்தித்தேன். அவர் தனியாக இருந்தாலும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார். நான் காரணத்தைக் கேட்டேன், ஆனால் பதிலளிக்கவில்லை. அதேசமயம், எங்களது வீட்டிற்குத் திரும்பவும் மறுத்துவிட்டார். முஸ்லிம் ஆண்களால் வஞ்சிக்கப்படும் இளம் பெண்களின் அடிப்படை உரிமைகள் பற்றி வாதிடும் அரசியல்வாதிகளால், குழந்தைகளை இழந்த குடும்பங்களின் துன்பத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது” என்று கூறினார்.

மேலும், “ஆம், நான் நாத்திகன் தான், ஆனால் என் மனைவியையும் மகளையும் கோயில்களுக்குச் செல்வதை நான் ஒருபோதும் நிறுத்தவில்லை. ஆன்மிகம் இல்லாததால் பயங்கரவாதிகள் அகிலாவை எளிதில் ஏமாற்றி மதம் மாற்றினர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மதநம்பிக்கையில் வளரும் கிறிஸ்தவ பெண்களும் கூட இந்த மதமாற்ற வலையில் சிக்கிக் கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். ‘தி கேரளா ஃபைல்ஸ்’ திரைப்படம் வெளிவருவதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அசோகன், இதுபோன்ற படங்கள், பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு மதமாற்றத் திட்டங்களின் வஞ்சகமான தந்திரங்களைப் பற்றி ஒரு தெளிவை ஏற்படுத்தும் என்றார். ஆலோசகர்களைப் பயிற்றுவிக்கவும், குழந்தைகளுக்கு குடும்ப மதிப்புகளைக் கற்பிக்கவும் மத அமைப்புகளுக்கு அவர் அழைப்பு விடுத்த அவர், இதனால் பெற்றோரிடமிருந்து பெண் பிள்ளைகளை பிரிக்கும் மத மோசடிகளுக்கு பலியாவதைத் தவிர்க்கலாம் என ஆலோசனை கூறினார். அசோகன், ஏ.எஸ். ஜபைனாவுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கேட்டு நீதிமன்றத்தை அணுக எண்ணியதாகவும் இதுபோன்ற செயல்கள் குற்றங்களை குறைக்கும் எதிர்கால முயற்சிகளுக்கு உதவும் என்றும் கூறினார். 5,000 பெண்களை மதமாற்றம் செய்ததாக  பெருமையாக, வெளிப்படையாக கூறிக்கொண்டவர் இந்த ஜைனபா. இவர் தற்போது தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.