சர்வதேச வளர்ச்சியில் ஆசியான் முக்கிய பங்கு வகிக்கிறது; மோடி

ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என இந்தோனேசியாவில் நடந்த ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். ஆசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியற்றில் பங்கேற்க வருமாறு இந்தோனேஷிய அதிபர் ஜோகா விடோடோ பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் (செப். 06)இரவு இந்தோனேஷியா புறப்பட்டார். நேற்று (செப்., 07) காலை 4மணிக்கு பிரதமர் மோடி ஜகார்தா சென்றடைந்தார். பின்னர் இந்தோனேசியாவின் ஜகார்தா மாநாட்டு மையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. ஆசியான் அமைப்பில் உள்ள பிற நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி வருகிறது. இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை நான் வாழ்த்துக்கிறேன். கடந்த ஆண்டு நாங்கள் இந்தியா-ஆசியான் நட்பு தினத்தை கொண்டாடி, அதற்கு ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மையை வழங்கினோம். நமது வரலாறும் இந்தியாவையும் ஆசியானையும் இணைக்கின்றன. அமைதி, செழிப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவையும் நம்மை ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் கிழக்குக் கொள்கையின் மையப் புள்ளியாக ஆசியான் உள்ளது. இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன்முயற்சியிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கும். உலக நிச்சயமற்ற சூழலில் கூட, ஒவ்வொரு துறையிலும் நமது பரஸ்பர ஒத்துழைப்பு சீராக முன்னேறி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.