அமித் ஷா கட்டுரை

டெல்லியை சேர்ந்த ‘ரூபா பப்ளிகேஷன்ஸ்’ நிறுவனம், பிரதமர் மோடியை பற்றி, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை தொகுத்து, ‘மோடி அட் 20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட உள்ளது. இந்த புத்தகத்தில், அமித் ஷா எழுதியுள்ள கட்டுரையில், ‘நம் நாட்டில், 1952 முதல் 1984 வரை நடந்த மக்களவைத் தேர்தல்களில், பிரதமர்களும் கட்சிகளும் பெரும்பான்மை பலம் பெற்றதற்கு சுதந்திர போராட்டத்தில் அவர்களின் தொடர்பும் வாரிசு அரசியலும் முக்கிய காரணம். சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்கை வைத்தே அவர்கள் தேசிய தலைவர்களாக அடையாளம் காணப்பட்டனர். அதன் பின்னர் தேசிய தலைவர்களுக்கான அடையாளம் தவறாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், 2014ல் நடந்த மக்களவைத் தேர்தல் இதனை மாற்றியமைத்தது. 30 ஆண்டுகளுக்கு பின் மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக பா.ஜ.க உருவெடுத்து சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் வேட்பாளராக, 2014 தேர்தலில் பா.ஜ.க அறிவித்ததிலிருந்தே அவர் தேசிய தலைவராக உருவெடுத்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக மோடி தேசிய தலைவர் என்பதற்கான அடையாளமாக விளங்கி வருகிறார்’ என குறிப்பிட்டுள்ளார்.