குஜாரத் மாநிலம் தாபி மாவட்டத்தில் உள்ள வையாரா பகுதியில் சி.எஸ்.ஐ பாதிரியான ராகேஷ் வசாவா அவரது தனது மனைவி ரேக்கா மற்றும் மூன்று மகன்கள் ராசின், யோஹான், யாக்கூப் ஆகியோர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு இளம் பெண்ணை கட்டாயம் மதம் மாற்றம் செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 20 வயது பி.காம் படிக்கும் மாணவி கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிரியாரின் மகன் யோஹானை காதலித்து வந்துள்ளார். இது இருவரின் குடும்பத்திற்கும் தெரியும். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அந்த மாணவியை யோஹான், வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். மாணவியும் வீட்டிற்கு சென்றதும் மாணவியின் அலைபேசியை வலுக்கட்டாயமாக பிடுங்கி ஸ்விட்ச் ஆப் செய்து, அந்த மாணவியின் கையில் இருந்த ஹிந்து மத புனிதக்கயிற்றை பாதிரியின் குடும்பத்தினர் அறுத்தனர். அதே நேரத்தில் மற்றொரு மகனான ராசினின் 25 வயது தோழியையும் அவர்கள் இதே போல் வீட்டிற்கு வரவழைத்து அந்த பெண்ணின் அலைபேசியையும் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளனர். பின்னர், இரு மாணவிகளையும் அடைத்து வைத்த பாதிரி குடும்பத்தினர், இவர்கள் அசுத்தமானவர்கள் என்றுகூறி அவர்களை மதமாற்றம் செய்யும் விதமாக, கைகள், கால்களில் கட்டாயமாக எண்ணெய் தடவி ஒரு நாள் முழுவதும் சில சடங்குகளையும் ஜபங்களையும் செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி, பாதிரியார் குடும்பத்திற்கு தெரியாமல் அலைபேசியில் தனது குடும்பத்திற்கு இத்தகவலை தெரிவித்தார். இதையடுத்து, மாணவியின் குடும்பத்தினர் இரு பெண்களையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிரியார் குடும்பத்தின் மீது கிரிமினல் வழக்கும், குஜராத் மத சுதந்திர சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும் காவல்துறை பதிவு செய்துள்ளது.