மணிப்பூரில் பறிமுதல் செய்த ஆயுதங்கள் பட்டியல் தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக, மே 3ல் மோதல் நடந்தது. இதையடுத்து வன்முறை பல நாட்களுக்கு நீடித்தது. தற்போது வன்முறை குறைந்தாலும் பதற்றம் நிலவி வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு விசாரித்து வருகிறது. மாநிலத்தில் தற்போதுள்ள நிலவரம் தொடர்பாக, மணிப்பூர் அரசின் தலைமைச் செயலர் அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து அமர்வு உத்தரவிட்டதாவது: நிவாரண முகாம்களில் உரிய உணவு, மருந்துகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மோரேயில் உள்ள நிவாரண முகாமில், அம்மை நோய் பரவி வருவதாக கூறப்படுவதை அரசு மறுத்துள்ளது. மணிப்பூரில் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் இதுவரை பறிமுதல் செய்த ஆயுதங்கள் தொடர்பான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கீதா மித்தல் தலைமையிலான குழுவுடன், மத்திய உள்துறை
செயலர் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்பட, மணிப்பூர் அரசு தனியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கியது தொடர்பான விபரங்களை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் பாதுகாக்கப்படும் வன்முறையில் உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.