ஆயுத தயாரிப்பு கும்பல் கைது

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி டெல்லி ஜம்மு நெடுஞ்சாலையில் உள்ள நரேலா பகுதியில் நவேத் ராணா என்பவரை சமீபத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த 10 கைத்துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிகள் கோகி கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படவிருந்ததை காவலர்கள் கண்டறிந்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் ராணாவிற்கு ஆயுதங்களை வழங்கிய அவரது கூட்டாளியான சலீம் என்பவரை கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தின் சாம்லி மாவட்டத்தை சேர்ந்த அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சாம்லியில் உள்ள கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆயுதம் தயாரிப்பு தொழிற்சாலையை கண்டுபிடித்து அதை அழித்தனர். இந்த தேடுதல் வேட்டையில், மொத்தம் 24 முழுவதுமாக தயாரிக்கப்பட்ட சிங்கிள் ஷாட் நாட்டு கைத்துப்பாக்கிகள், பாதி முடிக்கப்பட்ட 6 தானியங்கி கைத்துப்பாக்கிகள், 10 நாட்டுத் துப்பாக்கிகளின் பகுதிகள், 20 துப்பாக்கிக் குழல்கள், வெடிபொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் தனது சகோதரர் ஆசிப் தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிப் மூலம் சலீம் பற்றி அவருக்கு தகவல் கிடைத்ததாகவும் சலீமிடம் இருந்து சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைப் பெற்று, அவற்றை டெல்லி என்.சி.ஆர் மற்றும் உ.பியில் உள்ள பல்வேறு இடங்களில் குற்றவாளிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் சப்ளை செய்து வந்ததாகவும் ராணா தெரிவித்துள்ளார். சலீம் கடந்த 10 ஆண்டுகளாக சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் முகீம் கலா என்ற கும்பலுடன் இணைந்து செயல்பட்டு வந்ததாகவும் 2015ல் ஒரு கலவர வழக்கில், வன்முறையாளர்கள் பலருடன் சேர்ந்து காவல்நிலையத்துக்கு தீ வைத்தது உட்பட நான்கு கிரிமினல் வழக்குகள் அவர் மீது ஏற்கனவே உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.