மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, ‘“பாகிஸ்தானின் அறிக்கைகள் மற்றும் கருத்துக்களை நாங்கள் கவனித்து வருகிறோம். சிறுபான்மையினரின் உரிமைகளை தொடர்ச்சியாக மீறும் அவர்கள், மற்றொரு நாட்டில் சிறுபான்மையினரை நடத்துவது குறித்து கருத்து தெரிவிப்பது அபத்தமானது. பாகிஸ்தானில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், அகமதியாக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதற்கு உலகமே சாட்சியாக உள்ளது. பாகிஸ்தானைப் போல அல்லாமல், அனைத்து மதங்களுக்கும் பாரத அரசு மிகுந்த மரியாதை அளிக்கிறது. பாகிஸ்தானில் மதவெறியர்களைப் புகழ்ந்து, அவர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் கட்டப்படுகின்றன. பாகிஸ்தான் அதன் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துக்களுக்கும் அதன் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைக்கும் கடுமையாக பதிலளித்துள்ளார். முன்னதாக, நூபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் என்ற இரண்டு பா.ஜ.க தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு, இஸ்லாமாபாத்தில் உள்ள பாரத தூதர்களை வரவழைத்து தனது கண்டனத்தை பாகிஸ்தான் தெரிவித்தது. சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய அந்த இரண்டு பா.ஜ.கவின் தலைவர்களை நீக்கியுள்ளது பா.ஜ.க. மேலும் பா.ஜ.கவின் பொதுச் செயலாளர் அருண் சிங், ‘பாரத அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் விருப்பப்படி எந்த மதத்தையும் பின்பற்றவும், ஒவ்வொரு மதத்தை மதிக்கவும் மதிக்கவும் உரிமை அளிக்கிறது. பாரத சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், பாரதத்தை அனைவரும் சமமாக கண்ணியத்துடன் வாழும் ஒரு சிறந்த நாடாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என்று கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.