ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இறப்புகள் உண்மையா?

உத்தர பிரதேசம், ஆக்ராவில், ‘பராஸ்’ என்ற தனியார் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவுவில், கடந்த ஏப்ரலில், கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற அவர்களின் உறவினர்களுக்கு கூறப்பட்டது. சிலர் சென்றனர். பலர் செல்லவில்லை. அதனால், ஆக்சிஜன் தீர்ந்தால் எத்தனை பேர் இறப்பார்கள் என்பதை அறிய, அக்ஸிஜன் சப்ளை நிறுத்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனால்,அங்கிருந்த 96 கொரோனா நோயாளிகளில் 22 பேர் உயிரிழந்தனர் என்ற வீடியோ சமீபத்தில் வெளியானது. இதனை அந்த மருத்துவமனை உரிமையாளர் அரின்ஜய் ஜெயின் மறுத்துள்ளார். வீடியோ வெட்டி ஒட்டப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அப்போது அங்கே, 55 நோயாளிகள் மட்டுமே இருந்தனர், மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை, அன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த நோயாளிகளும் இறக்கவில்லை, அம்மருத்துவமனையில் கொரோனாவால் இதுவரை நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘அந்த வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டால் பராஸ் மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோவில், அரின்ஜய் ஜெயின் ‘மோடிநகர்’ ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி இல்லை என்று கூறியுள்ளார். இது உண்மை இல்லை. எனவே, அவர் மீது தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது’ என அம்மாநில அரசு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.