உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

கடந்த ஞாயிற்று கிழமை மதியம் அன்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் திரைத்துறை பிரபலங்கள் வடிவேலு, தேவா உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டங்கள் போலி என புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் தான் சிறப்பு விருந்தினர் என கூறி அவர் கையெழுத்திட்டதாக ஒரு கடிதத்தை எங்களிடம் கொடுத்துள்ளனர். அதனை வைத்து தான் நாங்கள் இந்த விழா நடத்த அனுமதி அளித்தோம். கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்விற்கும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீதியரசர் வள்ளிநாயகம் இந்த விவகாரத்தில் ஏமாந்துள்ளார். விருது வழங்கும் நிகழ்ச்சி என அரங்கத்தை வாடகைக்கு கொடுத்துவிட்டோம். இனி அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை தனியாருக்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். மோசடி கும்பலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நவம்பரில் விருது வழங்கும் விழா என அனுமதி கேட்டனர். நாங்கள் வழங்கவில்லை. ஜனவரியில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயரில் பரிந்துரை கடிதம் வந்ததால் அனுமதி வழங்கினோம். பல்கலைக் கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி அரங்கை வாடகைக்கு விடுவதில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவோம். தனியாருக்கு அரங்கு வாடகைக்கு விடப்படாது” என கூறினார்.