தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். மனிதாபிமானத்தின் அடிப்படையில் சக நாடுகளுக்கு பாரதம் வழங்கும் தடுப்பூசிகளின் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும். தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான மத்திய ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க நிதியுதவி அளிக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியும், வெளியில் பேசியும் வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதை வழிமொழிகின்றனர் அவரது கட்சியினரும் கூட்டணி தலைவர்களும். ஆனால், இதே காங்கிரஸ்காரர்கள் சில மாதங்களுக்கு முன் என்ன சொன்னார்கள்?
கோவாக்சின் இன்னும் மூன்றாம் கட்ட சோதனைகளை முடிக்கவில்லை என பயம் காட்டியதுடன் இதனை கண்டுபிடித்த விஞ்ஞானிகளையும் மருத்துவர்களையும் அவமானப்படுத்தினார் சசி தரூர். பா.ஜ.க, சி.பி.ஐ, வருமான வரித்துறை அமலாக்கத்துறை உள்ளிட்ட ஏஜென்சிகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதைப் போலவே, எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைக்க தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் என பச்சையாக புளுகினார் காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி.
அரசியல் விரோதிகளுக்கு எதிராக பா.ஜ.க இந்த தடுப்பூசி தவறாகப் பயன்படுத்தும் என்றார் இவர்களது கூட்டணியான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து சான்றளிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) கட்டாயப்படுத்தப்பட்டார் என்றார் காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவர் ஆனந்த் ஷர்மா. ராகுல் காந்தியின் நண்பரான சாகேத் கோகலே அவர் பங்குக்கு இதேபோல ஒரு கருத்தை முன்வைத்தார். தற்போது இவர்கள்தான், தடுப்பூசியை அனைவருக்கும்போட வேண்டும் என அரசியல் செய்கிறார்கள்.
இதேபோல, தமிழகத்திலும் தடுப்பூசியை குற்றம் சொன்ன திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் அழகிரி, தி.க தலைவர் வீரமணி உட்பட தி.மு.கவை அண்டிப்பிழைக்கும் அனைவரும், இன்னும் சொல்லப்போனால், தி.மு.க தலைவர் ஸ்டாலினும்கூட ஓடிச்சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டது எங்களுக்கு நன்றாகத் தெரியும் என நீங்கள் நினைப்பது புரிகிறது.
- மதிமுகன்