இராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.நம்மில் பலருக்கும் தெரிந்த “அஞ்சிலே ஒன்று பெற்றான்…” என்ற அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.ஆனால் இதன் பொருள் பலருக்கும் தெரியாது.அது, ‘ஐம்பூதங்களில் ஒன்றான காற்றின் மகன் அனுமன். ஐம்பூதங்களில் ஒன்றான நீரைத் (கடலைத்) தாவி, ஐந்தில் ஒன்றான விண்ணகமே வழியாக நல்லவர்களான இராம இலக்குவருக்காகச் சென்று, ஐந்தில் ஒன்றான பூமி பெற்ற பெண்ணான சீதையை அசோகவனத்தில் கண்டு, அயலவர் ஊரான இராவணன் ஊரில் ஐந்தில் ஒன்றான நெருப்பை வைத்தான். அவன் நம்மைக் காப்பான்’ என்பதாகும்.
கைகேயி, சூர்ப்பணகை போன்றோர் இராமாயண மகா காப்பியத்தில் ஓரிடத்திலேயே சிறப்பிடம் பெறுகின்றனர்.ஆனால் அனுமனின் இன்றியமையாமையைக் காப்பியத் தலைவனான காகுஸ்தனே (ராமன்) பல இடங்களில் சுட்டுகின்றான்.கண்டதும் கணப்பொழுதில், ‘சொல்லின் செல்வன்’ என்று ராமனிடம் இருந்து விருது பெற்றவன் அஞ்சனையின் மைந்தன் அனுமன்.
மாருதியுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பிலேயே, “ஆணிஇவ் வுலகுக்கு… ‘ என்று தம்பி இலக்குவனிடம் கழறுகிறான் காகுஸ்தன். “இவ்வுலகுக்கெல்லா அச்சாணி என்று சொல்லக் கூடிய இவன் திறமைக்கு ஏற்றதாகிய மிக உயர்ந்த பெருமையை ஐயமின்றித் தெளிந்தேன்.அது மெய்ம்மையாதலை நீயும் பின்னர்க் காண்பாய்.,” என்னும் வரிசிலைக்குரிசிலின் கூற்றினை அனுமன் மெய்ப்பிக்கிறான்.
இராமபிரானும், இலக்குவனும் சபரி சொன்ன வழியில் நடந்து, ரிஷியமூக மலையை அடைகின்றனர். வாலிக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்த சுக்கிரீவன், இவர்கள் வாலியின் ஆட்கள் எனத் தவறாக எண்ணிக் குகையில் மறைய, அமைச்சனான அனுமன், சாதாரண வடிவில் சென்று உண்மையை அறிந்து வருகிறேன் என்று சுக்கிரீவனிடம் கூறிச் செல்கிறான்.
“தொலைவிலிருந்து இருவரையும் கண்ட அனுமன், இவர்கள் திரிமூர்த்திகள் என்று ஐயமுற்றான்.பிறவித் துன்பங்களைப் போக்கி, அவைகளுக்குக் காரணமான, அறியாமையால் உண்டாகிற பழைய கருமத்தை ஒழித்து, வீடுபேற்றை அடையச் செய்யும் தேவர்கள் இவர்கள்.இவர்களைக் கண்டது முதல் எனக்கு எலும்பும் கரைகிறது.அளவில்லாத பக்தி மேன்மேலும் மிகுகின்றது.இவர்களிடம் எனக்கு உண்டாகும் அன்புக்கு எல்லை இல்லை,” என்று உணர்கிறான்.
முன்னொரு சமயம் வாயு பகவான் தன் மைந்தனான அனுமனிடம், “நீ திருமாலுக்கு அடிமை செய்” என்று கூற, அனுமன், “திருமாலை நான் அறிவது எப்படி?” எனக் கேட்க, “உனக்கு எவரைக் கண்ட மாத்திரத்தில் அளவில்லாத அன்பு உண்டாகிறதோ, அவரே திருமால் என்பதை அறியலாம்” என்று உபதேசித்திருந்தார். அந்நிலை தற்போது அனுமனுக்கு ஏற்படுகிறது.”என்பு எனக்கு உருகுகின்றது…” என்று இதனைக் கம்பநாட்டாழ்வார் குறிப்பிடுகிறார்.
சூரிய பகவானிடம் நவ வியாக்கிரணங்களையும் கற்ற நுட்ப அறிவினனாகிய அனுமன், இருவரையும் மேலும் நெருங்கி, அவர்களின் உள்ளக் கருத்தையும் ஆழ்ந்து அறிந்தான்.அப்போது அவர்களைச் சந்தித்து, “உங்கள் வரவு நல்வரவாகக் கடவது” என்றான் அனுமன்.அதற்கு இராமபிரான், “நீ எங்கிருந்து வருகிறாய்?நீ யார்?” எனக் கேட்டார்.
அதற்கு அனுமன், “நீர் கொண்ட காளமேகம் போன்ற அழகிய திருமேனியுடைய பெருமாளே!உன் திருக்கண்கள் உன்னைத் தவறாக நோக்கும் பெண்களுக்கு நஞ்சுபோல் உள்ளன.சாதாரணத் தாமரை மலர் காலையில் மலர்ந்து மாலையில் பனி வந்ததும் வாடிவிடும்; ஆனால் உன் திருக்கண்களோ இன்பம், துன்பம் எது நேர்ந்தாலும் வாடாதவையாக உள்ளன. அப்படிப்பட்ட பெருமைக்குரிய திருக்கண்களை உடையவனே! நான் வாயு தேவனுக்கு அஞ்சனாதேவியின் வயிற்றில் பிறந்தவன்.என் பெயர் அனுமன் என்பதாம்.இம்மலையில் வசிக்கும் சுக்ரீவன் உங்கள் வருகையைப் பார்த்துக் கலக்கமுற்று, விசாரித்து வருமாறு ஏவினான்.அதனால் நான் வந்தேன்” என்று பணிவுடன் கூறுகிறான்.
இங்கிதமாகவும், அக்கணத்துக்கு ஏற்றபடி வேகமாகவும், இலக்கணமாக அனுமன் தன்னைப் பற்றிக் கூறுவதைக் கேட்ட கோசலை மைந்தன் இளவல் இலக்குவனிடம், “தம்பி, இவன் கல்லாத கலையும், வேதக்கடலும் உலகில் இல்லாதனவே.! யார் கொல் இச் சொல்லின் செல்வன்” என்று வியந்து பாராட்டுகிறான்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி