மற்றொரு அமைச்சர் ராஜினாமா

இங்கிலாந்தின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ் அமைச்சரவையில், பாரத வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென், உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர், ‘ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறி விட்டேன்’ என கூறி ஹனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனினும், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டேன் எனவும் அவர் அதில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சுவெல்லா பிரேவர்மென் அளித்த பேட்டியொன்றில், இங்கிலாந்து நாட்டில் குறைந்த திறனுடைய அகதிகள், சர்வதேச மாணவர்கள் ஆகியோர் அதிக அளவில் உள்ளனர். இவர்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைந்து உள்ளது. இங்கிலாந்தின் வளர்ச்சியை ஊக்குவிக்க, புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கவும் குடியுரிமை கொள்கையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார். மேலும், விசா காலக்கெடு முடிந்த பின்பும், இங்கிலாந்தில் தங்கியுள்ள பாரத தேசத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து மக்கள் ஒன்றும் அதன் எல்லைகளை பாரத மக்களுக்காக திறந்து விடுவதற்காக, பிரெக்சிட்டில் வாக்களிக்கவில்லை என்று கூறினார். அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு பாரத மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசும் இதனை கண்டித்தது. இதையடுத்து அவர், திடீரென பாரத வம்சாவளியினருக்கு ஆதரவாக பேசினார். தீபாவளியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், பாரத வம்சாவளி மக்களாலேயே இங்கிலாந்தின் வளம் பெருகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பாரத வம்சாவளியினர் நாட்டை அலங்கரித்துள்ளனர். இரு நாடுகளின் பொருளாதாரம் வலுப்படுவதற்கான திட்டங்கள் உள்ளன. இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என கூறினார். இந்த சூழலில் தான் அவர் அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை அவர் அறிவித்துள்ளார். இந்த சூழலில், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். அரசில் தலைமை பதவி வகிக்கும் வெண்டி மோர்ட்டன் மற்றும் துணை கொறடாவான கிரெய்க் விட்டேக்கர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.