கேரளாவில் சமீப காலமாக வெறிநாய்கள் கடித்த சிலருக்கு ரேபிஸ் எதிர்ப்பு ஊசிகள் கொடுக்கப்பட்ட போதும் அவர்கள் இறந்ததால் மாநில சுகாதார அதிகாரிகளால் வாங்கப்பட்ட ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசியின் தரம், செயல்திறன் ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. கேரளாவில் பொது இடங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. முன்னதாக, கேரளாவின் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், சட்டமன்றத்தில் பேசுகையில், சுகாதாரத் துறையாலும் அங்கீகரிக்கப்படாத ரேபிஸ் தடுப்பூசிகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்படுவது பொய் என கூறினார். ஆனால், அவர் கூறியதுதான் பொய் என தற்போது தெரியவந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஊடகமான மலையாள மனோரமா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. அதன்படி, ஜூலை 15 அன்று அமைச்சர் வீணா ஜார்ஜின் அறையில் நடைபெற்ற கூட்டத்தில் கேரள மருத்துவ சேவைகள் கழகத்தின் (கே.எம்.எஸ்.சி.எல்) அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதில், அதிக தேவையைக் கருத்தில் கொண்டு, மத்திய மருந்து ஆய்வகம் (சி.டி.எல்) ஆய்வி செய்து இதுவரை சான்றளிக்காத தடுப்பூசிகளை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அதிகாரிகள் அரசுக்குத் தெரிவித்தனர் என இக்கூட்டம் தொடர்பான ஆவணங்கள் கூறுகின்றன. இதன் மூலம், பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசின் மற்றொரு பொய் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய மருந்து ஆய்வகத்தின் சோதனையில் சான்றளிக்கப்படாத தடுப்பூசிகள் கேரள சுகாதாரத்துறை உள்ளிட்ட மாநில அரசு அதிகாரிகள் தெரிந்தே வாங்கி பயன்படுத்தியுள்ளனர். இதனால் தான் வெறிநாய் கடி தடுப்பூசிகள் போட்டவர்களும் இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.