ஆளுநரை சந்தித்த அண்ணாமலை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்த 23 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சில தினங்களுக்கு முன், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக, உயிரிழந்தவர்கள் பட்டியல் மற்றும் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டிருந்தார். இந்த சூழலில், தமிழகத்தில் நிலவும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் சந்தித்து, கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், “கள்ளச்சாரயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பதுடன். கள்ளச்சாராயம் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் கள்ளச் சாராயம் காரணமாக 22 உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த, சாராய வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்து கொண்டிருக்கும் அமைச்சர் திரு செஞ்சி மஸ்தானைப் பதவி நீக்கம் செய்யும்படி தமிழக முதலமைச்சரை வலியுறுத்தக் கோரி, தமிழக பாஜக சார்பாக மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். மேலும், கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், தன் கடமையிலிருந்து தவறியது மற்றும் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்று, பண மோசடி செய்த வழக்கில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை எதிர்கொள்வது ஆகிய காரணங்களுக்காக அமைச்சர் திரு செந்தில் பாலாஜியையும் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தக் கோரி கேட்டுக் கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.