தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கோரி கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல், மண், பாறைகள் உள்ளிட்ட கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இவை அதிகம் கடத்தப்படுகிறது. 3 யூனிட் கொண்டு செல்வதாக கணக்கு காட்டிவிட்டு கூடுதலாக 8 யூனிட் கடத்திச் செல்லப்படுகிறது. இங்குள்ள 11 சோதனைச்சாவடிகள் வழியாக இவை கொண்டு செல்லப்படுகின்றன. சுதந்திரம் கிடைத்த பின், 75 ஆண்டுகளில் குவாரிகளில், 60 முதல் 70 அடி தான் தோண்டியிருப்போம். ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பின், இரண்டு ஆண்டுகளில், 150 முத 220 அடி வரை குவாரிகளை தோண்டியுள்ளனர். இதன் பாதிப்பு, அடுத்த 10 முதல் 30 ஆண்டுகளில் தெரியவரும். இப்படி அத்துமீறி கனிமவளம் எடுத்துச் செல்வதில் அரசுக்கு ஒரு ரூபாய் கூட வருவாய் இல்லை. தனியார் மாபியாக்கள், குவாரிக்கு ஒரு மேலாளரை நியமித்து ஒரு யூனிட்டுக்கு, ரூ. 400 வசூலிக்கின்றனர். இதற்கான தொகையை தனியார் நிறுவனம் பெறுகிறது. இது கோபாலபுரத்துக்கு செல்கிறது. கோவை மாவட்டத்தில் இருந்து மட்டும் 1,500 லாரிகள் மூலம்ல் 12 ஆயிரம் யூனிட் மண் கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுகிறது. இன்று முதல் 20 நாட்களுக்குள் கனிமவளங்கள் கேரளாவுக்கு செல்வதை தி.மு.க அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் 21ம் நாள் ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் 11 சோதனைச் சாவடிகளிலும் ஷிப்ட் முறையில் பா.ஜ. கவினர் நின்று கேரளாவுக்கு செல்லும் லாரிகளை தடுப்பர். அதில், நானும் ஒரு சோதனைச்சாவடியில் தொண்டனாக வந்து தடுப்பேன். தி.மு.க., ஆட்சிக்கு வந்து 22 மாதங்களாகிறது. பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கொடுத்து இருந்தால், 22 ஆயிரம் ரூபாயும், காஸ் மானியம், 100 ரூபாய் என்றால், 2,200 ரூபாய் என, மொத்தம் 24,200 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தி இருக்க வேண்டும். அதை தி.மு.க செய்யவில்லை” என கூறினார்.