அன்னா ஹசாரேவை வைத்து தன்னை வளர்த்துக்கொண்ட தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். அன்னா ஹசாரேவின் தொப்பியை அடையாளமாகக் காட்டி, அந்தத் தொப்பியில் ஆம் ஆத்மி என்று எழுதி விளக்குமாற்றை கட்சியின் சின்னமாக்கி டெல்லி தேர்தலில் ஜெயித்து முதல்வரானார். ஆனால், அதன் பிறகு, அன்னா ஹசாரேவைப் பற்றி பேசுவதைக் கூட தவிர்த்து தேர்ந்த அரசியல்வாதியானார் கெஜ்ரிவால். இந்த சூழலில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார். அதில், அர்விந்த் கெஜ்ரிவால் எழுதிய ‘ஸ்வராஜ்’ என்ற புத்தகத்தில் மதுபானக் கொள்கை பற்றி சில மகத்தான பரிந்துரைகளை சொல்லியிருந்தார். ஆனால், முதல்வரான பிறகு அதை எல்லாவற்றையும் மறந்துவிட்டார். லோக்பால் பற்றி மேடையில் பேசிய கெஜ்ரிவால், ஆட்சிக்கு வந்தபிறகு லோக் ஆயுக்தாவை முழுவதுமாக மறந்துவிட்டார். சட்டப்பேரவையில் ஒருமுறை கூட லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர முயற்சிக்கவில்லை. அர்விந்த் கெஜ்ரிவாலின் வார்த்தைகளும் செயல்பாடுகளும் வெவ்வேறாக உள்ளது என சாடியுள்ளார் அன்னா ஹசாரே, மேலும், ஒரு பேரியக்கத்தில் விளைந்த கட்சிக்கு இது அழகா? நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள். டெல்லி அரசிடமிருந்து நான் இப்படி ஒரு கொள்கையை எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.