ஆந்திர அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசாணை G.O.MS.No. 52ன்படி கிறிஸ்தவ பாதிரிகளுக்கு அம்மாநில அரசு வழங்கும் உதவித்தொகை போலவே, ஹிந்து கோயில் அர்ச்சகர்களுக்கும் மசூதிகளில் பணி புரியும் இமாம்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
பார்க்க இது நல்ல திட்டமாகத் தெரிந்தாலும், ஜகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான அரசு, சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்களை இப்பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. கோயில்களின் வருமானத்தை பொருத்தே அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ஆனால், இமாம்களுக்கும் பாதிரிகளுக்கும் அப்படிப்பட்டத் தடைகள் ஏதுமில்லை.
அர்ச்சகர்களுக்கு கோயிலின் நிதியில் இருந்துதான் பணம் வழங்கப்படும். ஆனால், இமாம்களுக்கும் பாதிரிகளுக்கும் அரசுக்கு மக்கள் கட்டும் வரியில் இருந்து பணம் வழங்கப்படும். வஃப் வாரியத்தை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கும். ஆனால், கோயில்கள் விஷயத்தில் அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், அரசு கோயிலின் அனைத்து விஷயங்களிலும் தலையிடும் என்பது போன்ற ஹிந்து விரோத அம்சங்கள் இதில் மறைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒரு சில நபர்களின் நலனுக்காக அரசு அதன் பணத்தையும் செலவிடகூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. 2012ல் மேற்கு வங்கத்தில் இதே போன்றதொரு வழக்கில் கல்கத்தா உயர்நீதிமன்றம் அரசின் முடிவை ரத்து செய்தது. ஒரு சில நாட்களுக்கு முன், கேரள நீதிமன்றமும், மதரசா பள்ளி ஆசிரியர்கள் வழக்கில் இதனை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.