அன்புமணி ராமதாஸ் தன் அறிக்கையில், ‘வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு, அவர்களை மயிலிறகால் வருடிக் கொடுப்பதன் மர்மத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. மே 2ம் தேதிக்கு முன்பு வரை ரூ.370 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலை, இப்போது ரூ.520. ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் முன்பு 3,400 இப்போது ரூ.3900. முக்கால் அங்குல ஜல்லி முன்பு 3,600 இப்போது ரூ.4100. எம். சாண்ட் ஒரு யூனிட் முன்பு 5,000 இப்போது 6,000. கட்டுமானக் கம்பி ஒரு டன் முன்பு ரூ. 68,000 இப்போது 75,000. செங்கல் ஒரு லோடு முன்பு ரூ.18,000 இப்போது ரூ. 24,000 என அதிகரித்துள்ளது. டில்லியில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.350, தெலுங்கானா ரூ.360, கர்நாடகம் ரூ.380. ஆனால், தமிழகத்தில் மட்டும் ரூ.520. மற்ற கட்டுமானப் பொருட்களின் விலைகளும் தமிழகத்தைவிட மற்ற மாநிலங்களில் 25 சதவீதம் குறைவாகவே உள்ளன. கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசியுள்ளோம். விலை குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஆனால், இன்று வரை விலைகள் குறைக்கப்படவில்லை. அப்படியானால், உற்பத்தியாளர்கள் தமிழக அரசின் அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டவர்களா? அல்லது தமிழக அரசும் உற்பத்தியாளர்களும் உடன்பாடு செய்து கொண்டு நாடகம் நடத்துகிறார்களா? ஏழைகளுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறைகளில் முக்கியமானது கட்டுமானத் தொழில். விலை உயர்வால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பது ஏன்? கட்டுமானப் பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்க அரசு ஆணையிட வேண்டும். மறுக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.