கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அதிகாலை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், காரில் இருந்த பயங்கரவாதி ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் முபினுடன் தொடர்பில் இருந்த முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக முகமது ஷேக் பரீக், உமர் பாரூக், சீனிவாசன், பெரோஸ்கான் என மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த பயங்கரவாதி ஜமேஷா முபினுக்கு பல பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததும், கோவை உள்பட தமிழகம் முழுவதும் பயங்கர நாசவேலைக்கு அவன் திட்டமிட்டது, கோயில்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது, இதற்காக பயங்கர வெடிபொருட்களை சேகரித்து முபினின் வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில், முதலில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், கோவையில் கோயில் முன்பு நடத்தப்பட்ட தாக்குதல் கேஸ் சிலிண்டர் வெடிப்பு தாக்குதல் கிடையாது. அது ஐ.இ.டி. எனப்படும் அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.