ஊழல், பாரபட்சத்திற்கு முற்றுப்புள்ளி

பிதமர் மோடி நேற்று ‘ரோஜ்கார் மேளா’வில் மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். விழாவில் பேசிய பிரதமர், “முன்பெல்லாம் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது கடினமானதாக இருந்தது. விண்ணப்பபடிவத்தைப் பெற மணிக் கணக்கில் மக்கள் காத்திருக்க வேண்டும். தற்போது அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது முதல் அதற்கான முடிவுகளை அறிவிப்பது வரை அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையாக ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு நேர்காணல்கள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் ஆட்சேர்ப்பு முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களால் ஊழல், பாரபட்சம் போன்றவைகள் தடுக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு நான் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியை சந்தித்தேன். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் அவர்களுடைய நிறுவனம் ரூ. 80,000 கோடிக்கு ஏற்றுமதியில் ஈடுபட இருப்பதாக அவர் தெரிவித்தார். இது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பொருள் விநியோக துறையில் ஈடுபாடு கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய செய்தி. சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் ரூ.8,000 கோடிக்கு மேட் இன் இந்தியா பொருள்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்து என்னிடம் தெரிவித்தார். அடுத்த வாரத்தில் மேலும் சில பெரிய நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளேன். அவர்கள் அனைவரும் பாரதத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.

வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் ஏற்றுமதி சாதனைகள் ஆகியவை நாடெங்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. வளர்ந்து வரும் துறைக்கு இந்த அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவினால் வேலைவாய்ப்பின் தன்மைகள் மாறி வருகின்றன. ஸ்டார்ட் அப் துறைகளில் நாடு மிகப்பெரிய புரட்சியை சந்தித்துள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2014 வரை சில நூறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களே நாட்டில் இருந்தன. ஆனால், தற்போது அவற்றின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. அவைகளால் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2014க்கு முன்பாக இருந்த 720 பல்கலைக் கழகங்கள் தற்போது 1,100 ஆகவும், மருத்துவக் கல்லூரிகள் 400ல் இருந்து 700 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2014க்கு முன்பாக நாட்டில் 74 விமான நிலையங்களே இருந்தன. தற்போது அவை 150 ஆக உயர்ந்துள்ளன. பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வரும்போது நாட்டின் ஊரகப்பகுதிகளில் 4 லட்சம் கி.மீ தூரத்திற்கே சாலை வசதிகள் இருந்தன. அவை தற்போது 7.25 லட்சம் கி.மீ தூரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கான அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 4 கோடிக்கும் அதிகமான நிரந்தர புக்கா வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.