ஷாகாவை சீர்குலைக்க முயற்சி

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் கொட்டக்கலில், கடந்த பிப்ரவரி 6 அன்று இரவில் கோட்டக்கல் சிவன் கோவில் வளாகத்தில் வழக்கம்போல ஆர்.எஸ்.எஸ் ஷாகா நடந்து வந்தது. ஷாகா எப்போதும் போல அமைதியாகவும் வழக்கமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒழுக்கத்துடனும் நடந்து கொண்டிருந்தது. ஷாகாவின் முடிவில் பாடப்படும் சங்கப் பிரார்த்தனைக்கு சற்று முன்பாக அங்கு ஆளும் கட்சியான சி.பி.எம் கட்சியின் குண்டர்களும் அதன் இளைஞர் பிரிவான டி.ஒய்.எப்.ஐ அமைப்பின் ரௌடிகளும் வந்து அமைதியாக நடைபெற்றுக்கொண்டு இருந்த ஷாகாவை சீர்குலைக்க முயன்றனர். மேலும், ‘இது ஒரு முன்னெச்சரிக்கை மட்டுமே, ஷாகாவை நிறுத்தாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும், உங்கள் கை, கால்களை வெட்டி அருகில் உள்ள கால்வாயில் வீசுவோம்’ என்பது போன்ற ஆத்திரமூட்டும் மிரட்டல் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி பா.ஜ.க மண்டல பொதுச் செயலாளரும், மூத்த ஸ்வயம்சேவகருமான ஜெயன் தெலப்புரத்து, “உண்மையில், தனியார் கோயில் தேவஸ்தானத்தின் முழு அனுமதியுடன் அங்கு ஆர்.எஸ்.எஸ் ஷாகா நடத்தப்படுகிறது. சங்க ஸ்வயம்சேவக்களிடம் ஷாகாவை நிறுத்துமாறு கேட்க எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது எந்த வெளி அமைப்புக்கும் எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. இச்சம்பவத்தில், குறிப்பிடத்தக்க வகையில், அங்கு வந்த குண்டர்கள் வேறு எதையும் செய்யத் துணியவில்லை. அங்கிருந்த சங்க ஸ்வயம்சேவகர்கள் சங்கத்தின் ஆச்சார பததியின்படி ஷாகாவை முழுவதுமாக முடித்தனர். மேலும், அப்பகுதியின் ஸ்வயம்சேவகர்கள், என்ன சூழல் வந்தாலும் உன்னதமான ஷாகா வேலையைத் தொடரத் தீர்மானித்துள்ளனர். தேசியவாத சக்திகளைத் தூண்டிவிட்டு அதன் பிறகு, பிரச்சனைகளையும், உடல் ரீதியான மோதல்களையும் திட்டமிட்டு உருவாக்கி, அதன் பின்னர் மதச்சார்பின்மை ஆபத்தில் உள்ளது என்று அழுது ஆர்பாட்டம் செய்யும் வழக்கமான சி.பி.எம் கட்சியின் வழிமுறைதான் இந்தச் சம்பவம். மேலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த மாவட்டத்தில் முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்திப்படுத்துவதற்கும் சட்டவிரோத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அவர்களின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ கட்சியினரையும் மகிழ்விக்கும் அவர்களின் மற்றொரு வழிமுறை இது” என கூறினார்.