மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பஜ்ரங் தள அமைப்புகளுக்கு எதிராக, பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி மசூதி அருகே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அந்த துண்டுப் பிரசுரங்களில், இளம் முஸ்லிம் பெண்களுக்கான ஒரு “திறந்த கடிதம்” என்ற தலைப்பில் மத மாற்றப் பிரச்சனையை மையப்படுத்தி போலியான தகவல்கள் அடங்கியிருந்தன. அதில், “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் அல்லது கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் பெண்களுடன் நட்பு வைத்து அவர்களை மதம் மாற்றுவதாக அந்த துண்டுப் பிரசுரம் கூறியது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் முஸ்லிம் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதாகவும் அவர்களை காஃபிர்கள் (முஸ்லிம் அல்லாதவர்கள்) ஆக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இது ஒரு மத வாழ்த்துடன் தொடங்கி, “உங்கள் நம்பிக்கையின் மதிப்பு ஏழு கண்டங்களுக்கும் ஏழு வானங்களுக்கும் அப்பாற்பட்டது. உலக முஸ்லிம்களின் உயிர்களை விட உங்களின் கெளரவம் விலைமதிப்பற்றது. நீங்கள் உங்கள் தந்தையின் பெருமை, நீங்கள் உங்கள் சகோதரரின் பெருமை, நீங்கள் உங்கள் குடும்பத்தின் மானம். நீங்கள் சாதாரணமானவர் அல்ல, ஆனால் நீங்கள் இஸ்லாத்தின் இளவரசி. காஃபிர்கள் (ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள்) ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் முஸ்லிம் பெண்களை விசுவாச துரோகிகளாக்கி அவர்களின் கௌரவத்தை மிதிக்க நினைக்கிறார்கள். அமராவதி நகரத்தைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் காஃபிர்களாக மாறியுள்ளனர். சமூக ஊடகங்கள் பள்ளி மற்றும் கல்லூரியில், நீங்கள் நட்பின் சாக்குப்போக்கில் கட்டமைக்கப்படுகிறீர்கள். சகோதரி நீங்கள் இதில் பலியாக வேண்டாம். காவிக் காதல் வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சில நாட்களுக்குப் பொய்யான மகிழ்ச்சி, பரிசுகள் மற்றும் பணத்தின் பேராசையால் உங்கள் உலகத்தையும் மறுமையையும் அழித்துவிடாதீர்கள். நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் திரும்பி வாருங்கள். உங்கள் சகோதரர் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார். அல்லா உங்கள் நம்பிக்கையையும், கண்ணியத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவானாக” என எவ்வித ஆதாரமும் இன்றி போலி தகவல்கள் பதியப்பட்டுள்ளது. துண்டுப் பிரசுரங்களின் இறுதியில் அனுப்புநராக உங்கள் விசுவாசமான சகோதரர் என்று அச்சிடப்பட்டுள்ளது.
ஹிந்து அமைப்புடன் தொடர்புடைய சாரதா டிக்லியா என்பவர், இந்த பிரசுரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கலல்குய் மசூதிக்குப் பின்னால் உள்ள ராவ்ஜி பஜார் அருகே ஹிந்துக்களை அவமானப்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதை அடுத்து, காவல்துறையினர் இதன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அடையாளம் தெரியாத 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்களை விநியோகித்தவர்கள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.