சௌதியில் 8,000 ஆண்டு பழமையான கோயில்

சௌதி அரேபியாவில் அல்ஃபா என்ற இடத்தில் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்பொருள் தளத்தை சௌதி பாரம்பரிய ஆணையம் கண்டுபிடித்துள்ளது. அல்ஃபாவின் கிழக்கே காஷெம் கரியா என்று அழைக்கப்படும் துவாய்க் மலையின் விளிம்பில், இந்த ஆணையத்தின் தலைமையிலான பன்னாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, உயர்தர வான்வழி புகைப்படம், டுரோன் காட்சிகள், தொலை உணர்தல், தரையில் ஊடுருவ கூடிய ரேடார், லேசர் ஸ்கேனிங் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த இடத்தை பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல கண்டுபிடிப்புகளில், மிக முக்கியமான ஒன்று கல் கோயிலின் எச்சங்கள் மற்றும் பலிபீடத்தின் சில பகுதிகள் என தெரியவந்துள்ளது.  இந்தத் தெளிவான அறிகுறிகள், அக்காலத்தில் அங்கிருந்த மக்களின் சடங்குகள், வழிபாடுகள் ஆகியவை வாழ்க்கையில் உள்ளார்ந்ததாக இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இதைத்தவிர, 8,000 ஆண்டுகள் பழமையான கற்கால மனித குடியிருப்புகளின் எச்சங்கள், 2,087 கல்லறைகள் உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டு ஆறு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.