வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே, எம்.வி.குப்பத்தில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வரும் 16ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இந்த சூழலில், தற்போது கெங்கையம்மன் சிரசை காணவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முன்னதாக, இக்கோயிலை அப்பகுதியை சேர்ந்த இரண்டு பிரிவினர் சொந்தம் கொண்டாடி வந்தனர். கோயில் திருவிழாவை நடத்த இரு தரப்பினரும் தனித்தனியே காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர். விழாவின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்த கெங்கையம்மன் சிரசை கடந்த 27ம் தேதி அருகிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்குள் மக்கள் எடுத்துச் சென்று வைத்துள்ள நிலையில்தான் சிரசு காணாமல் போனது. சி.சி.டிவி கேமரா பதிவை வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.