புதுவை பல்கலைக் கழக வளாகக் கட்டிடங்கள், உள்கட்டமைப்புகள் விரிவுபடுத்துதல் போன்ற வளர்ச்சிப் பணிகள் கடந்த 2017 முதல் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு மேலும் மெருகூட்டும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 24 ஏப்ரல் 2022 அண்று அங்கு ரூ.48.66 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள, இயற்பியல் மற்றும் வேதியியல் துறையின் இணைப்புக் கட்டடங்கள், பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் உள்ள உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான புதிய கட்டடம் என மூன்று கல்விக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், புதுவைப் பல்கலைக்கழக முதன்மை தலைவருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தத்துவமேதை ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்த நாள் விழாவும் புதுவை பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. இதில் அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.