நீதிமன்றங்களில் அம்பேத்கர் படங்களை நீக்க கூடாது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ராமதாஸ்: ‘தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் தவிர்த்து வேறு எந்த தலைவர்களின் சிலைகள், படங்களையும் வைக்க கூடாது’ என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்தியாவில் நீதிமன்றங்கள் செயல்படுவதன் முதன்மை நோக்கமே அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதுதான். அதை உருவாக்கிய அம்பேத்கரின் சிலையோ, படமோ அங்கு இருப்பது எப்படி தவறாகும். எனவே, நீதிமன்ற வளாகங்களில் காந்தி, திருவள்ளுவருடன் அம்பேத்கரின் சிலைகள், படங்களையும் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.
எம்.பி.ரஞ்சன் குமார்: நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் தவிர்த்து, மற்ற தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இன்றைய இந்தியாவில் அனைத்து மக்களின் உரிமைகளையும் சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் கவசமாக அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது. அதை உருவாக்கிய அம்பேத்கரின் படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே, உயர் நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெற வேண்டும்