ஆயிரம் ஆண்டு காலம் அடிமைப் பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சில் தன்னம்பிக்கையும், துணிவும் தந்த மகத்தான தலைவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.டாக்டர் அம்பேத்கர், மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் 1891, ஏப். 14 அன்று ராம்ஜி – பீமாபாய் தம்பதிக்கு 14வது குழந்தையாகப் பிறந்தார். ‘மகர்’ என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம்வயதில் பல்வேறு துன்பம், துயரங்களை அனுபவித்தார். ஆரம்பப் பள்ளியில் பயின்றபோது தனக்கு உதவிய மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியரின்மீது ஏற்பட்ட பற்றால், தனது பெயரை ‘பீமாராவ் அம்பேத்கர்’ என்று மாற்றிக் கொண்டார். 1907ல் தனது மெட்ரிக் படிப்பை முடித்த அம்பேத்கர், மும்பைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் பட்டியலின மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னைப் படிக்க வைத்த பரோடா மன்னரின் சமஸ்தானத்திலேயே அம்பேத்கர் ராணுவ செயலாளராக 18 மாதங்கள் பணிபுரிந்தார். மன்னர் அவர்மீது பெருமதிப்பு கொண்டிருந்தாலும், அங்கிருந்த ஊழியர்கள் அவரைத் தீண்டத் தகாதவராகவே பார்த்தனர். அதன் விளைவாக, அப்பதவியை உதறிவிட்டு வெளியேறினார். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அதேசமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930ல் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டிற்குச் செல்லுகையில், ”என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்கவேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதேசமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழுமனதுடன் ஆதரிப்பேன்” என்றார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் கருத்துக்களை முன்வைத்து அம்பேத்கர், ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி’யை 1936ல் நிறுவினார். அந்த கட்சி தேர்தலில் போட்டியிட்டு, மும்பை மாகாண சட்டசபைக்கு 15 உறுப்பினர்களை அனுப்பியது.
பின்னாளில் அவர் ‘இந்திய குடியரசுக் கட்சி’யை நிறுவனார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டார். தனது அபார முயற்சியால் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கினார். 1951ம் ஆண்டு ஹிந்து சட்டத் தொகுப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபொழுது பிரதமர் நேருவுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால் தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராடிக் களைத்த நிலையில், ஹிந்து சமயத்தின் பழமைவாதிகளுக்கு எதிராக, புத்த மதத்தைத் தழுவப் போவதாக அறிவித்தார். இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்தவர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தபோதிலும், பாரதப் பாரம்பரியத்துடன் கூடிய புத்த மதத்தில் சேரவே விரும்புவதாக அறிவித்தார்.
அதன்படி, நாகபுரியில் 1956, அக்.14ல் நடந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பெளத்த மதத்திற்கு மாறினார்.சமூகநீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிச. 6ல் காலமானார். அவருக்கு 1990ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கி இந்திய அரசு பெருமை பெற்றது. ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளியாக விளங்கிய அம்பேத்கர், சிறந்த சமூக சீர்திருத்தச் செம்மலாகப் போற்றப்படுகிறார்.
அம்பேத்கரும் தேசியமும்
அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை புரட்சியாளர்களுக்கே உரித்த மேடு பள்ளங்கள் நிரம்பியது. பாரதத்தின் கொடிய வழக்கங்களுள் ஒன்றான தீண்டாமையால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டவரான அம்பேத்கரின் உடனடி எதிர்வினை அவரது கருத்துப் பரிமாற்றங்களுள் காணப்படுகிறது. அவரது தேசியம், ஹிந்துத்துவம் தொடர்பான கருத்துகளிலும், அவரது ஆரம்பகால கருத்துகளில் இருக்கும் கோபமும் கடுமையும் பின்னாளில் கனிந்ததைக் காணமுடியும். அம்பேத்கர் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கூறிய சில கருத்துகளைக் கொண்டு அவரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடுவதும், புறக்கணிப்பதும் தவறாகவே முடியும்.
மகாத்மா காந்தி ஆங்கிலேயே அரசுடன் விடுதலைக்காகப் போராடிய காலத்தில், தனது மக்களின் சுயநிர்ணயத்துக்காவும் சமூக விடுதலைக்காகவும் போராடும் மனநிலையில் அம்பேத்கர் இருந்தார். எனவே, அவர் மகாத்மா காந்தியால் தமது மக்களுக்கான போராட்டங்கள் குலையாமல் இருக்க மிகக்கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தார். அவற்றை மகாத்மா காந்தி புன்னகையுடன் கடந்தார்.
நமது துரதிர்ஷ்டம் மகாத்மா காந்தியும் அண்ணல் அம்பேத்கரும் ஒரே நேர் கோட்டில் பயணம் செய்ய முடியவில்லை என்பதுதான். எனினும், அம்பேத்கர் எக்காலத்திலும் தேச விரோதமாகச் செயல்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் அவரைச் சூழ்ந்திருந்தன. ஆனால், அவர் அதிகாரத்திற்காகவோ, புகழுக்
காகவோ தனது தேசபக்தியை விட்டுக் கொடுத்ததில்லை. மிகவும் நசுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவருக்கு பிறப்பிலிருந்தே மறுக்கப்பட்ட உரிமைகள், ஆங்கிலேயரால் அல்ல. இந்த நாட்டின் பிரஜைகளான பிற உயர்ஜாதி ஹிந்துக்களால் அந்த அடிமைத்தனத்திலிருந்து தனது சமுதாயம் விடுதலை பெறாமல், தேச விடுதலை பற்றிப் பேசுவது போலித்தனம் என்று அம்பேத்கர் உணர்ந்திருந்தார்.
பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வல்கருடன் அவர் கொண்டிருந்த நட்புறவும், தொடர்பும், பௌத்த மதத்தை நாகபுரியில் (1956) அவர் தழுவியபோது அவர் ஆற்றிய உரையும் இதனை நிரூபிக்கின்றன. ‘இந்த தேசம் நலமுடன் வாழ தீண்டாமையை ஒழிக்க வேண்டும்’ என்று கூறிய தலைவர்கள் பலரும் பிறப்பினால் உயர்ஜாதியினர். அவர்கள் தங்கள் உணர்வுகளாலும், மனிதாபிமானத்தாலும், உயர் சிந்தனையாலும் தீண்டாமையை எதிர்த்தனர். ஆனால், அம்பேத்கர் பிறப்பிலேயே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். அவரது உள்ளும் புறமும் அனலாகக் கொதித்தது தனது சமுதாய விடுதலைக்காகவே. அதன்பிறகே அவர் தேச விடுதலை தேவை என்றார்.
மொத்தமாகப் பார்த்தால், பாரதத்துக்கு பூரண சுயராஜ்ஜியம் வேண்டும் என்று திலகர் அல்லாத காங்கிரஸ் தலைவர்கள் கோராத காலத்திலேயே கோரிக்கை விடுத்தவர் அம்பேத்கர் (1930). பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு என்ற இரண்டு அம்சங்களுள் பிற அரசியல் தலைவர்கள் சொல்லத் துணியாத கருத்துகளை நேர்மையுடன் முன்வைத்தவர் அம்பேத்கர். தீண்டத்தகாதவர்களைப் பாதுகாக்கும் தன் நடவடிக்கையை தனது தேசபக்தி நிலைப்பாட்டிலிருந்தே அம்பேத்கர் அணுகினார். அதேபோல், விடுதலைப் போராட்டத்தையும் தலித் கண்ணோட்டத்துடன் அணுகினார்.
விடுதலைப் போராட்டக்களத்தில் சமூகநீதியும் தீண்டாமை ஒழிப்பும் முக்கிய அம்சங்களாக மாறக் காரணமானவர் அவரே.குடிமக்களே தேசம் என்பதை முழுமையாக உணர்ந்தால் மட்டுமே குடிமக்களின் ஒரு பகுதியான தீண்டப்படாதாரின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் வேட்கை புரியும். இந்தத் தேசம் வலுப்பெற வேண்டுமானால், அம்பேத்கரின் அடியொற்றி சமூக ஒருமைப்பாட்டை நாம் வலுப்படுத்த வேண்டும். அதுவே இன்றைய தேவை.
‘அண்ணலின் நினைவில்’ புத்தகத்திலிருந்து தேசிய சிந்தனைக்கழக வெளியீடு