தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த அக்டோபர் 2ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணமாக கூறி பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனிடையே, தமிழகத்தில் வரும் நவம்பர் 6ம்ந் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தியுள்ளார்.