அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் என்ற பிம்பம் உள்நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் நெடிய வரலாற்றை உன்னிப்பாக கவனித்தால் இது சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் அல்ல என்பது தெளிவாகத் தெரிந்து விடும். எனினும் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் அல்ல என்று கூற தயக்கம் காட்டப்பட்டு வருகிறது.
2005ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை உக்கிரமடைந்தது. மருத்துவ மேல் படிப்பில் முஸ்லிம்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் புயலைக் கிளப்பியது. 2006ம் ஆண்டு மத்திய அரசும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் இந்த பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் தான் என்று தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தன. ஆனால் 2006ல் திடீர் திருப்பம் ஏற்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் தானா என்பது குறித்து துல்லியமாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விடம் உச்சநீதிமன்றம், பொறுப்பை ஒப்படைத்தது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடர்பாக தவறான பிம்பங்கள் பொதுவெளியில் உலா வருகின்றன. ஆனால் இந்த அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றை உற்றுநோக்கினால் இதற்கு சிறுபான்மை அந்தஸ்து பொருந்தாது என்பது புலனாகிவிடும்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது ஒருதரப்பினரின் வாதம். மற்றொரு தரப்பினர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் தான் என்கின்றனர். இந்த இரு தரப்பிலும் இடம்பெறாத மற்றவர்கள் இவ்விவகாரத்தில் குழப்பம் அடைந்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்காதவர்களாக உள்ளனர்.
முகமதியன் ஆங்கிலோ – ஓரியண்டல் காலேஜ் என்ற கல்வி நிறுவனம் தான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக உருமாறியது. இதுதொடர்பான வரைவு மிகவும் தந்திரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1968ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயலிழக்க வைக்கும் வகையிலும் முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும் வகையிலும், இந்த வரைவில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
61 ஆண்டுகள் இயங்கிய பிறகு அரசியல் சாசனப்பிரிவு 30ன்கீழ் இந்த பல்கலைக்கழகத்தை கொண்டு வருவதற்கான முயற்சிதான் இந்த புதிய வரைவு. இது அரசியல் சாசனத்தையே ஏமாற்றும் கீழ்த்தரமான முயற்சியாகும். இதில் 5(2)(சி) தந்திரமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த பல்கலைக்கழகத்தின் நோக்கம் இந்திய முஸ்லிம்களின் கல்வி, கலாச்சார மேம்பாட்டை ஊக்குவிப்பது என்ற வாசகம் புதிதாக இணைக்கப்பட்டு விட்டது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக் குழு, மருத்துவ மேற்படிப்பில் முஸ்லிம் மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. இதை நிர்வாகக் குழுவும் ஒப்புக்கொண்டது. இது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டது. மறைந்த அர்ஜுன் சிங், அப்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். 25.2.2005ல் மேலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச்செயலாளர் கடிதம் வாயிலாகத் தெரிவித்தார்.
இதை எதிர்த்து முஸ்லிம் அல்லாத மாணவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார்கள். அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அருண் தாண்டன், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது, அரசியல் சாசனத்துக்குப் புறம்பானது என தீர்ப்பளித்தார். மேலும் 1968ல் அஷிஸ் பாஷா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இப்போதும் பொருந்தும் என்று நீதிபதி அருண் தாண்டன் சுட்டிக் காட்டினார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் நாடாளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதை சிறுபான்மையினர் உருவாக்கவில்லை. எனவே அரசியல் சாசனப் பிரிவு 30, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு பொருந்தாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயலிழக்க வைக்க நாடாளுமன்றம் முயற்சி மேற்கொண்டது தவறானது. அரசியல் சாசனத்துக்கு ஏற்படையது அல்ல என்பதையும் நீதிபதி அருண் தெளிவுபடுத்தினார்.
கட்டுரையாளர்: ஆர்கனைசர் செய்தியாளர், ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி