ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ நடத்திய டுரோன் தாக்குதலில், அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அல்கொய்தா தலைவரானைவர், செப்டம்பர் 11, 2001 அமெரிக்காவின் இரட்டை கோபுர தற்கொலை தாக்குதல் நடத்தக் குழுவை ஒருங்கிணைத்தவர் எனக் கூறப்படுகிறது. மேலும், அக்டோபர் 12, 2000 அன்று ஏமனில் யு.எஸ்.எஸ் கோல் கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 17 அமெரிக்க மாலுமிகள் கொல்லப்பட்டனர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்களில் அய்மன் அல் ஜவாஹிரியும் ஒருவர் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான பதிலடியாகவே அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரியின் மரணம் குறித்து, பலமுறை வதந்திகள் வந்துள்ளன. இம்முறை வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை எப்படி அமெரிக்கா உறுதிப்படுத்திக்கொண்டது என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. என்றாலும், இந்த முறை, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்த ஆப்கானிஸ்தானுக்குள் ஆளில்லா விமானம் பறந்ததற்குக் கண்டனம் தெரிவித்து, இது சர்வதேச கொள்கைகளை மீறுவதாக அமைந்திருக்கிறது எனக் கூறியுள்ளது இதனை உறுதிப்படுத்துகிறது. ஆகஸ்ட் 2021ல் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இது. இதன்மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை அந்நாட்டில் தனது ராணுவம் இல்லாவிட்டாலும் சமாளிக்க முடியும் என்று அமெரிக்கா தலிபான்களுக்கு உணர்த்தியுள்ளது.