2026ல் மதுரை எய்ம்ஸ்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணியை தொடங்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 36மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி முடிவடையும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது. ஆனால் உறுதியளித்தபடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இதனால் மத்திய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்ற அவமதிப்பு மனுவை ரமேஷ் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ .1,264 கோடியில் அமைக்க 17.12.2018ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செலவு ரூ. 1,977.8 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானக் காலம் 5 ஆண்டுகள் 8 மாதம். அதாவது 2021 மார்ச் முதல் 2026 அக்டோபர் வரை இப்பணிகள் நடைபெறும். அதிக செலவு மற்றும் அதிக காலக்கெடுவுக்கு சுகாதாரத் துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. நிதித்துறையிடம் அனுமதி பெற வேண்டி உள்ளது. இதனால் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.