மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் அகோலாவிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டகேவாடி, சின்னஞ்சிறிய கிராமம். பலர் இந்த கிராமத்தின் பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஊருக்குத்தான் 32 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தம்பதி- (மோகன் – ஸ்மிதா) சென்று சேர்ந்தார்கள். அவர்கள் அன்று செய்த சங்கல்ப பலத்தால் அந்த ஊரின் காட்சியே முற்றிலும் மாறியுள்ளது. வெறும் 55 குடும்பங்கள் வசித்து வந்த அந்த ஊர் 1985 வாக்கில் எப்படி இருந்தது?
ஊரே தரிசு நிலத்தால் சூழப்பட்டிருந்தது. அங்கே பயிர் செய்ய வழியில்லை, வேலை வாய்ப்பும் கிடையாது. தண்ணீர் வேண்டும் என்றால் கூட ஊரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குளத்துக்குத்தான் போக வேண்டும். ஆண்டில் 9 மாதங்கள் வரை ஆண்கள் அத்தனை பேரும் பிழைப்புத் தேடி வெளியூர் போய் விடுவார்கள். முதியவர்களும் குழந்தைகளும் பெண்களும் தான் ஊரில் இருப்பார்கள். அந்த நிலைமையில்தான் மோகன் – ஸ்மிதா தம்பதி அந்த ஊரைத் தங்கள் கர்ம பூமி ஆக்கிக் கொண்டார்கள்.
இன்று டகேவாடி “சீதப்புனல் வயல் சூழ்ந்த” சொர்க்கம்! தண்ணீர்ப் பஞ்சம் நிலவிய அந்த ஊரில் இன்று 26 கிணறுகள், 35 பண்ணைக்குட்டைகள். தக்காளி, முட்டைக்கோஸ் பார்த்தறியாத அந்த ஊரில் இருந்து இன்று வாரந்தோறும் டெம்போ நிறைய தக்காளி, முட்டைக்கோஸ் நகர மார்க்கெட்டுக்கு போவதைப் பார்க்கலாம். இந்த மாயாஜாலத்தை நடத்திக் காட்டியது ‘சுயஷ் சாரிட்டபிள் டிரஸ்ட்’ உருவாக்கியுள்ள உன்னத விவசாய தொழில்நுட்பம்தான். ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றம் கொண்டுவந்த நுட்பம் அது.
டிரஸ்ட் மூலம் மோகன் – ஸ்மிதா தம்பதி வனவாசி (பழங்குடி) மாணவர்களுக்கு அந்த நுட்பத்தை சொல்லிக் கொடுத்ததுதான் டகேவாடி சுபிட்சம் அடைவதற்கு பிள்ளையார் சுழி ஆனது. அந்த மாணவர்களின் குடும்பங்கள் ஒரு ஏக்கர் தரிசு நிலத்தில் இருந்து ஆண்டுதோறும் 40,000 ரூபாய் வருமானம் பார்ப்பதைப் பார்த்து அக்கம் பக்கத்து ஊர்களில் எல்லாம் இயற்கை விவசாயத்தை ஆதாரமாகக் கொண்ட இந்த தொழில்நுட்பம் சகஜமாக பரவியது. ஒரு ஊரில் சோளத்தையும் சோயாவையும் கூட்டுப் பயிராக சாகுபடி செய்து நல்ல லாபம் பார்த்தார்கள் என்றால், இன்னொரு ஊரில் தடுப்பணை கட்டி நான்கு விவசாயிகள் அந்த பாசன வசதியைக் கொண்டு அமோக விளைச்சல் நடத்திக் காட்டினார்கள். இந்த புதிய சாகுபடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதனை அளவாக பருத்தி மகசூல் பார்த்த விவசாயிகளும் உண்டு. டிரஸ்ட் வாயிலாக நடைபெற்ற பணிகளால் இன்று மகாராஷ்டிரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் 2,600
ஊர்களில் ஒரு லட்சம் விவசாயிகள் ஏழ்மை என்ற சாபத்தில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க (ஆர்.எஸ்.எஸ்) ஸ்வயம்சேவகரான மோகன், அகோலா வனவாசி கல்யாண் ஆசிரம பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் தன் வாழ்வே முற்றிலும் புதிய திசையில் பரிணாமம் கண்டது என்று உணர்கிறார். பல ஆண்டுகள் புனே நகர சங்கசாலக் பொறுப்பில் சேவையாற்றிய மோகன், கிராம முன்னேற்றம் என்பதற்கு வனவாசிப் பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கச் செய்வது தான் அஸ்திவாரம் என்ற சிந்தனை உள்ளவர்.
டிரஸ்ட் தொண்டர்கள் விதை நேர்த்தி செய்வது, உயிரி வேளாண்மை, இவற்றில் பயிற்சி அளிப்பதுடன் கோ மூத்திரத்திலிருந்து உரம் தயாரிக்கும் நுட்பத்தையும் சொல்லிக் கொடுத்தார்கள். டிரஸ்ட் மூலம் நிறைய கிணறுகள், சிறுசிறு தடுப்பணை அமைத்து பாரம்பரிய முறைப்படி தண்ணீர் சேமிப்பு வழிமுறைகளை பின்பற்றி ஊரின் நீர் ஆதாரத்தை செழுமைப்படுத்தினார்கள். எல்லாமே அப்படி ஒன்றும் சுலபமாக நடந்துவிடவில்லை. சில ஊர்களில் உட்காருவதற்கு கூட டிரஸ்ட் தொண்டர்களை மக்கள் அனுமதிக்கவில்லை. ஊருக்கு முதலில் தண்ணீர் ஏற்பாடு செய்யுங்கள், அப்போதுதான் நீங்கள் சொல்வதை நம்புவோம் என்று நிபந்தனை போட்டார்கள். இன்று அப்படிப்பட்ட ஒரு ஊரில் மூன்று ஏக்கரில் ஸ்ட்ராபெரி பயிர்செய்து ஆண்டுக்கு 1,60,000 ரூபாய் லாபம் பார்க்கிறார் ஒரு விவசாயி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது சாதனை அளவு என்பதால் பல தொலைக்காட்சி சேனல்காரர்கள் இந்த ஊரை நோக்கிப் படையெடுத்தார்கள்.
பல ஆண்டுகள் வரை விதை வாங்க, கிணறு எடுக்க விவசாயிகளுக்கு டிரஸ்ட் நிதி உதவி செய்து வந்தது. அதை விவசாயிகள் அறுவடைக் காலத்தில் கறாராக பைசல் செய்து வந்தார்கள். இன்று இந்த கொடுக்கல் வாங்கல் எல்லாம் ஊர் ஊராக சுய உதவிக் குழுக்கள் வாயிலாக நடைபெறுகிறது. மிச்சம் பிடித்து, மிச்சம் பிடித்து விவசாயிகள் எல்லோரும் ஆத்ம நிர்பர் (தற்சார்பு) நிலையை அடைந்து வருகிறார்கள்.
லட்சோப லட்சம் வனவாசிக் குடும்பங்களை சொந்தக் காலில் நிற்கச் செய்து அவர்களின் வாழ்வில் வசந்தம் மலரச் செய்வதற்காக, கோமாதாவை ஆதாரமாகக் கொண்ட புதிய உன்னத விவசாய மாடல் உருவாக்கியுள்ள புனே நகரின் ‘சுயஷ் சாரிட்டபிள் டிரஸ்ட்’, நானாஜி தேஷ்முக் பெயரிலான விருது பெறும் முதல் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: சேவாகாதா இணைய தளம் தமிழில் பெரியசாமி