லண்டன் ஹைட் பூங்காவில் உள்ள ஸ்பீக்கர் கார்னரில், கடந்த ஜூன் 12 அன்று இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களால் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ரீச் இந்தியா யு.கே, சிம்ப்லி சனாதன், யோகா வித் மாயா மற்றும் பல்வேறு அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, ‘எதிரிகளிடமிருந்து தங்கள் நாட்டைப் பாதுகாக்க பாரத தேசத்தினர் ஒன்றுபட வேண்டும். ஒரு கலைஞனாக எனது கலையின் மூலம் உண்மையைச் சொல்வது எனது கடமை. மனித நேயத்தின் மூலமும் தேசிய ஒருமைப்பாட்டுத் தத்துவத்தின் மூலமும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். ஹிந்துக்கள் மதம் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பன்முகத்தன்மையை மதிக்கிறார்கள், அவற்றை கொண்டாடுகிறார்கள், பதிலுக்கு அதையே எதிர்பார்க்கிறார்கள்’ என பேசினார். மேலும், ‘பயங்கரவாதத்திற்கு எதிராக பாரதியராகிய நாம் ஒன்றுபட்டு நிற்போம். பாரதிய மக்களாகிய நாங்கள் காஷ்மீரில் ஹிந்துக்கள் மீதான உலகின் மிக நீண்ட தொடர்ச்சியான இனப் படுகொலையை கண்டிக்கிறோம். வகுப்புவாத, பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக நாங்கள் எழுந்து நின்று குரல் கொடுப்போம். உலகில் ஒவ்வொரு ஹிந்துவுக்கும் அநீதி இழைக்கப்படும்போதும் நாங்கள் குரல் கொடுப்போம். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சுதந்திர பேச்சுரிமை தடை செய்யப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். ஹிந்துக்களாகிய நாங்கள், உண்மை, மனிதநேயம் மற்றும் ஒருமைப்பாட்டை நம்புகிறோம். ஜெய் ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்’ என அங்கு பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தபோதிலும், சில பாகிஸ்தான் ஆதரவு குழுக்கள் நிகழ்ச்சியை சீர்குலைக்க முயன்றன, ஆனால் அவை தோல்வியில் முடிந்தன. இந்த நிகழ்ச்சியில் பேசிய புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும் யூடியூப் பிரபலமுமான பாகிஸ்தானின் கராச்சியின் முன்னாள் மேயர் அரிஃப் ஆஜ்கியா, ஹிந்துக்கள் விழித்துக் கொண்டனர். அவர்கள் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றனர்’ என கூறினார். இங்கிலாந்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறகு இரண்டாவது முறையாக ஒரு நபரின் பேச்சைக் கேட்பதற்காக புலம்பெயர்ந்த இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டது இதுவே முதல் முறை.