மத்திய பாதுகாப்புத் துறை கடந்த 1996ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் பிரம்மாண்டமான சர்வதேச விமான கண்காட்சியை நடத்தி வருகிறது. ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியான இதில் பல்வேறு வெளிநாடுகளின் போர் விமானங்கள், அது சார்ந்த துறைகள் பங்கேற்கும். அவ்வகையில், 14வது ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் நேற்று தொடங்கியது. வரும் 17ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில், பாரதத்தின் போர் விமானங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த அதி நவீன போர் விமானங்களும் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சியில் மொத்தமாக 811 அரங்குகள் இடம்பெறுகின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் 701 இந்திய விமான நிறுவனங்களின் அரங்குகளும், 110 வெளிநாட்டு அரங்குகளும் இடம்பெறுகின்றன. உள்நாட்டு உபகரணங்கள், தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியின் கடைசி இரண்டு நாளில் பொதுமக்கள் விமான கண்காட்சியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்தகண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசுகையில், “புதிய பாரதத்தின் திறமைக்கும் புதிய உயரங்களே புதிய பாரதத்தின் முகம் என்பதற்கும் பெங்களூருவின் இன்றைய வான்வெளி சாட்சியாக உள்ளது. தேசம் புதிய உயரங்களைத் தொட்டு அதனைக் கடந்தும் சென்று கொண்டுள்ளது. பெருகிவரும் நமது நாட்டின் திறமைக்கு “ஏரோ இந்தியா 2023″ ஓர் உதாரணம். இந்த கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்றிருப்பது என்பது, உலகநாடுகள் மத்தியில் பாரதத்தின் மதிப்பு அதிகரித்துள்ளதை வெளிக்காட்டுகிறது. கடந்த காலத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் விதமாக, பாரதம் தவிர உலக நாடுகளில் இருந்து 700க்கும் அதிமான பங்கேற்பாளர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். இது நமது நவீன பாரதத்தின் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக இது வெறும் விமான கண்காட்சியாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று இது வெறும் கண்காட்சி மட்டுமல்ல. இது தேசத்தின் பலம். 21ம் நூற்றாண்டின் புதிய பாரதம், இப்போது எந்த வாய்ப்பையும் இழக்காது, கடின உழைப்பில் பின்தங்கிவிடாது. நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு துறையிலும் புரட்சியை கொண்டு வருகிறோம். பல தசாப்தங்களாக மிகப்பெரிய பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்த நமது தேசம், இப்போது 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. அடுத்த நிதியாண்டுக்குள் பாதுகாப்பு ஏற்றுமதியில் 5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்று கூறினார்.