டெல்லியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ராகுல்காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் தான் தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டால், மக்கள் பிரதிநிதி பதவி தானாகவே காலியாகி விடும் என்பது நமது நாட்டின் சட்டம். இதுதான் நடந்திருக்கிறது. இதற்காக பா.ஜ.க. தலைவர்களை ராகுல் தொடர்ந்து குறை கூறி வருவதால் எந்த பலனும் இல்லை. நாடு முழுவதும் பா.ஜ.க. பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில்தான் இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். அதேபோல, தமிழகத்தில் பா.ஜ.க அ.தி.மு.க. கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. எனவே, இக்கூட்டணி தொடர்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு குறி வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் சொல்கிறார்கள். இப்போதுகூட ராகுல் பதவி இழப்பு விஷயத்தில் நாங்கள் அழுத்தம் கொடுத்ததாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் பற்றி ராகுல் அவதூறாக பேசுகிறார். சுதந்திரப் போராட்ட தியாகிகளை இப்படி அவமரியாதை செய்யக்கூடாது. இதுபற்றி அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுலுக்கு அறிவுரை வழங்க வேண்டும்” என்றார்.