கடந்த 2016-ம் ஆண்டு மேற்குவங்க கல்வித் துறையில் 13,000 ஆசிரியர்கள், ஊழியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணி நியமனத்தில் சில ஆயிரம் பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதன்படி முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி, முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவரும், நடிகையுமான சயோனி கோஷும் சிக்கியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. முதல்வர் மம்தாவின் அரசியல் வாரிசாக கருதப்படும் அபிஷேக் பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமான சயோனி கோஷுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருப்பது மேற்குவங்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சயோனி கோஷ் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அவரது செல்போன் அணைக்கப்பட்டு இருக்கிறது.